பசியால் தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்தை எழுப்ப முயன்ற குழந்தை! ரயில் நிலையத்தில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

பீகாரில் ரயில் நிலையத்தில் பசியால் தாய் உயிரிழந்தது தெரியாமல் சடலத்தை எழுப்ப முயன்ற குழந்தையின் வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி நெஞ்சை உலுக்கி வருகிறது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் உண்ண உணவு இன்றி கையில் காசு இல்லாத நிலையில் அவரவர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதை பலரும் தங்களிடம் ரயிலில் செல்வதற்குக் கூட காசு இல்லாததால் நடந்தே செல்லும் அவலமும் தினம்தோறும் நிகழ்ந்து வருகிறது. அவ்வாறு நடந்து செல்லும் வழியில் அவர்களுக்கு தேவையான உணவும் குடிநீரும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அப்படியாக உண்ண உணவின்றி குடிக்க நீரும் இன்றி புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தற்போது தன் உயிரையே இழந்திருக்கிறார் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பிஹார் ரயில்நிலையத்தில் பெண் ஒருவர் நடைமேடையில் எந்த அசைவுமின்றி படுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அவருக்கு அருகில் அவரது குழந்தை ஒன்று அவரை எழுப்ப முயற்சி செய்து வந்துள்ளது. வெகு நேரமாக எழுப்பும் முயற்சி செய்தும் அந்த குழந்தையின் தாயார் எந்த அசைவுமின்றி கிடந்துள்ளார். தன் தாய் இறந்தது கூட தெரியாமல் அந்தக் குழந்தை தன் தாயின் புடவையை இழுத்து எழுப்ப முயற்சித்த காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றன. இதுகுறித்து ரயில்வே நிலைய காவல் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த அவர்கள் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது புலம்பெயர் தொழிலாளியான அந்த பெண்மணி, தன்னுடைய குழந்தையுடன் குஜராத்தில் இருந்து ரயிலில் புறப்பட்டிருக்கிறார். ஊரடங்கு உத்தரவால் வருமானம் இன்றி தவித்து வந்த அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். பின்னர் அவர் வந்த ரயில் திங்கட்கிழமை அன்று முசாபர்நகரை அடைந்துள்ளது. அப்பொழுதே அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாகி உள்ளது.

மேலும் அந்தப் பெண் அதே ரயிலில் பயணம் செய்து வந்துள்ளார். இதையடுத்து அந்த ரயில் ஆனது நேற்றைய தினம் ரயில் நிலையத்தை வந்து அடைந்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் குடிக்க குடிநீரும் உணவும் இன்றி அந்தப்பெண் பசியால் தவித்து வந்துள்ளார். பசிக்கொடுமை தான் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனதுக்கு முதல் காரணமாகும். இதை தொடர்ந்து அந்த பெண் பசிப்பிணியால் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இதனை அறியாத அந்த பச்சிலம் குழந்தை தன்னுடைய அம்மாவை அழுதுகொண்டே எழுப்ப முயற்சித்து தோல்வியை தழுவியுள்ளது. இந்த சம்பவம் காண்போரின் நெஞ்சங்களை பதைபதைக்க வைத்துள்ளது.