கல்யாணம் மற்றும் விஷேசங்களில் செய்யப்படும் கதம்ப சாம்பாரின் ரகசியம் இதுதாங்க!

சாம்பாரில் நாம் பலவகை செய்து சாப்பிட்டு வந்திருக்கிறோம். அரைத்து விட்ட சாம்பாருக்கு என்றுமே ஒரு தனி மவுசு உண்டு. பலர் பலவிதமான மசாலாக்களை அரைத்துப் போட்டு செய்வார்கள். வீட்டுக்கு வீடு நிறைய வேறுபாடுகள் உண்டு.


இன்று நாம் பார்க்கும் இந்த அரைத்துவிட்ட கதம்ப சாம்பாரானது நம் வீட்டு விசேஷங்களில் அதாவது பூஜைகளில், சமாராதனைகளில் அல்லது விருந்தினர்கள் வருகை, சின்ன பங்ஷன்களில் செய்யக்கூடியது.

தேவையான பொருட்கள் :-

- 2 1/2 ஸ்பூன் தனியா

- 1 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு

- 1/2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு

- 5 காய்ந்த மிளகாய்

- 1/4 டீஸ்பூன் வெந்தயம்

வெறும் வாணலியில் முதலில் பருப்புக்களைப் போட்டு, பாதி வறுபட்டவுடன், மீதி சாமான்களை போட்டு, பருப்பு சிவந்தவுடன் எடுத்து, ஆறவைத்து, லேஸ் ரவை பதத்திற்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

- 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் (மிக்ஸியில் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்)

- 5 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பு (நன்கு குழைய வேகவைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்)

- சிறு எலுமிச்சை அளவு புளி - (3 டம்ளர் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்)

காய்கறி :- 1/2 குடைமிளகாய், 2 அவரைக்காய், 5 பரங்கித்துண்டு, 2 வெண்டைக்காய், 5 துண்டு முருங்கைக்காய், கறிவேப்பிலை.

தாளிக்க :- எண்ணெய் கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை.

செய்முறை :- * வாணலியில் புளித்தண்ணீரை வைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, கொதிக்க ஆரம்பித்தவுடன், காய்களை போட்டு, பெருங்காயம் கருவேப்பிலை போட்டு மிதமான தீயில் மூடி வேக விடவும். காய்கள் வெந்தவுடன் கரைத்து வைத்த பருப்பை ஊற்றி இரண்டைரை ஸ்பூன் அரைத்து வைத்த சாம்பார் பொடியை கொஞ்சம் நீரில் கலந்து கொதிக்கும் சாம்பாரில் கொட்டவும். ஒரு கொதி வந்தவுடன் அரைத்து வைத்த தேங்காயை போட்டு, கலக்கி உப்பு, காரம், புளி சரிபார்த்து மேலும் ஒரு கொதிவிட்டு கேஸை அணைக்கவும்.

ஒரு தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் விட்டு மிளகாயை கிள்ளிப் போட்டு கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலையை போட்டு தாளித்து சாம்பாரில் கொட்டவும்.

இப்போது கமகமக்கும் சுவையான வீட்டு விசேஷங்களில் செய்யும் அரைத்துவிட்ட கதம்ப சாம்பார் தயார்.