சேரன் மேட்டரை வைத்து உங்க கதையை முடிக்கிறேன்..! விஜய் டிவியை மிரட்டும் பிக்பாஸ் மீரா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு வர வேண்டிய சம்பளத்தை கொடுக்கவில்லை என்றால் அங்கு சேரனுடன் நிகழ்ந்த மேட்டரை கையில் எடுக்கப்போவதாக விஜய் டிவியை மிரட்டியுள்ளார் மீரா மிதுன்.


சென்னையில் நேற்று மீரா மிதுன் செய்தியாளர்களின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எனக்கு தற்போது வரை சம்பளம் கொடுக்கவில்லை. நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு நாளைக்கு இவ்வளவு என எனக்கு சம்பளம் பேசப்பட்டது.

மொத்தம் 35 நாட்கள் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால் தற்போது வரை எனக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லை. நான் எப்போதும் பணத்தை பெரிதாக நினைத்தது இல்லை. புகழுக்காகத்தான் நான் சென்றேன்.

ஆனால் கூறியபடி விஜய் டிவி சம்பளத்தை தரவில்லை. சரி அவர்களே தருவார்கள் என்று காத்திருந்தேன். அதைப்பற்றி அவர்கள் வாய் திறக்கவில்லை. இதனால் நான் தொடர்பு கொண்டு விஜய் டிவியிடம் செட்டில்மென்ட் பற்றி பேசினேன்.

அதற்கு விஜய் டிவி நிர்வாகம் மிகவும் அலட்சியமாக பதில் அளித்தனர். இது எனக்கு சுயமரியாதைக்குறைவாக உள்ளது. நான் பணத்திற்காக நீதிமன்றம் சென்றால் பார்த்துக் கொள்ளலாம் என விஜய் டிவி நினைக்கலாம். ஆனால் நான் ஏமாளி இல்லை.

நீதிமன்றம் சென்றால் விஜய் டிவி ஏற்கனவே சந்தித்து வரும் வழக்குகளில் அது ஒரு வழக்காகிவிடும். ஆனால் நான் பிக்பாஸ் வீட்டில் நிகழ்ந்த பிரச்சனையை மனித உரிமை ஆணையத்திடம் கொண்டு செல்வேன். சேரன் சார் என்னிடம் நடந்து கொண்ட விதத்தை மாதர் சங்கங்களிடம் கொண்டு செல்வேன்.

இதன் மூலம் விஜய் டிவி இனி பிக்பாஸ் நிகழ்ச்சியே நடத்த முடியாமல் செய்துவிடுவேன். எனக்கு சேர வேண்டிய சம்பளத்தை கொடுத்துவிட்டால் பிரச்சனை இல்லை. மாறாக என்னை ஏமாற்ற நினைத்தால் விஜய் டிவிக்கு தான் அது பிரச்சனை.