தீர்த்தங்களில் நீராடுவதால், என்னென்ன தோஷங்கள் தீரும், எப்படிப்பட்ட நோய்கள் விலகும்..? அடேங்கப்பா அதிசய தகவல்

தீர்த்தங்கள் எனும் திருக்குளங்கள் பொதுவான நிலையில் தன்னில் நீராடும் அன்பர்களுக்கு உடல் தூய்மையுடன், மனத்தூய்மையையும் தருகின்றன.


சில தலங்களில் அமைந்துள்ள தீர்த்தங்கள் அபூர்வ சக்திகள் கொண்டுள்ளன. இவற்றில் சில சித்த சுவாதீனமின்மை, மனநிலைக்குறை ஆகியவற்றை நீக்குகின்றன. சில மலட்டுத்தன்மையை நீக்கி பிள்ளைப்பேற்றை அளிக்கின்றன. சில தீர்த்தங்கள் வசியத் தன்மையை அதிகரிக்கச் செய்து திருமண தடை, வறுமை ஆகியவற்றை நீக்குகின்றன.

சிலப்பதிகாரத்தில் கணவனை பிரிந்து வாடும் கண்ணகியிடம் அவருடைய தோழியான தேவந்தி பூம்புகாரின் புறத்தேயுள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் எனும் தீர்த்தங்களில் மூழ்கி வழிபடின் அவள் கணவன் அவளிடம் திரும்பி வருவான் என்று கூறியிருக்கிறார்.

திருவெண்காட்டில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் உள்ளது. இத்தலத்துக்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர் இத்தீர்த்தங்களை ’வெண்காட்டு முக்குளநீர்’ என்றழைத்து இதில் மூழ்கினால் பேய் அண்டாது, பிள்ளைப்பேறு உண்டாகும் என கூறியிருக்கிறார்.

திருமுருகன் பூண்டியில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி ஆலயத்தை வலம் வர மனசஞ்சலம், சித்தப்பிரமை ஆகியன நீங்கும் என்ற நம்பிக்கை காலம் காலமாக நிலவி வருகின்றது.

வடாற்காடு மாவட்டம் திருவிரிஞ்சிபுரம் மார்க்கசகாய சுவாமி ஆலயத்தில் பெரிய சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் பெண்கள் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி பிரகாரத்தில் உறங்குகின்றனர் அவர்கள் கனவில் அம்பிகை தோன்றி பூ, பழம், பாலாடை முதலியவற்றை அளித்தால் அவர்களுக்கு புத்திரப்பேறு விரைவில் உண்டாகும் என்று நம்புகின்றனர்.

மதுராந்தகம் ஆலயத்திற்கு முன்பாக சிறு குட்டையாக ஒரு தீர்த்தம் உள்ளது. இதில் மூழ்கி வழிபட கருங்குட்டம் வெண்குட்டம் முதலான சரும நோய்கள் தீரும் என்று கூறுகின்றனர்.

அக்கினி வழிபட்டு பேறு பெற்ற தலமான அன்னியூரிலுள்ள அக்னி தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டால் ரத்தக்கொதிப்பு, உஷ்ணரோகம், முதலிய நோய்கள் நீங்கும் என்று நம்புகின்றனர்.

திருப்பயற்றூர் எனும் தலத்திலுள்ள தீர்த்தத்தில் மூழ்கினால் கண்ணொளி கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள தீர்த்தம் இஷ்டசித்தி என்பதாகும். இதில் மூழ்கி இதன் கரையிலுள்ள சூரியனை வழிபட்டால் இழந்த கண்ணொளியைப் பெறலாம் என்பது நம்பிக்கையாகும்.

இது போன்று மருத்துவ குணமிக்க அனேக தீர்த்தங்கள் தென்னகமெங்கும் உள்ளன.

மேலும் ஒவ்வொரு தீர்தத்திற்கும் ஒவ்வொரு நன்மை இருப்பதாகக் கூறப்படுகிறது.

மகாலட்சுமி தீர்த்தம்         செல்வ வளம் பெருகும்.

சாவித்திரி தீர்த்தம்          பேச்சுத் திறன் வளரும்.

காயத்ரி தீர்த்தம்          உலக நன்மை உண்டாகும்.

சரஸ்வதி தீர்த்தம்          கல்வியில் உயர்வு தரும்.

சங்கு தீர்த்தம்          வசதியாக வாழ்வு அமையும்.

சக்கர தீர்த்தம்          மன உறுதி கிடைக்கும்.

சேதுமாதவ தீர்த்தம்          தடைபட்ட பணிகள் தொடரும்.

நள தீர்த்தம்          தடைகள் அகலும்.

நீல தீர்த்தம்          எதிரிகள் விலகுவர்.

கவய தீர்த்தம்          பகை மறையும்.

கவாட்ச தீர்த்தம்          கவலை நீங்கும்.

கந்தமாதன தீர்த்தம்          எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம்.

பிரம்மஹத்தி தீர்த்தம்          பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

கங்கா தீர்த்தம்          பாவங்கள் அகலும்.

யமுனை தீர்த்தம்          பதவி வந்து சேரும்.

கயா தீர்த்தம்          முன்னோர் ஆசி கிடைக்கும்.

சர்வ தீர்த்தம்          முன்பிறவி பாவம் விலகும்.

சிவ தீர்த்தம்          சகல பிணிகளும் நீங்கும்.

சத்யாமிர்த தீர்த்தம்          ஆயுள் விருத்தியாகும்.

சந்திர தீர்த்தம்          கலை ஆர்வம் பெருகும்.

சூரிய தீர்த்தம்          முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.

கோடி தீர்த்தம்          முக்தி அடையலாம்.