சென்னையில் சிக்கியது ஆட்டு இறைச்சி தான்! வெளியானது ஆய்வு முடிவு

ஆட்டிறைச்சி


இராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட  இறைச்சி நாய் இறைச்சி இல்லை ஆட்டிறைச்சி தான் என சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது.

இராஜஸ்தானின் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த 17ந் தேதி வந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட இரண்டாயிரம் கிலோ இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை, மாநகராட்சி சுகாதாரத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இந்த இறைச்சி ஆட்டிறைச்சி இல்லை என்றும் நாய் இறைச்சி என்றும் கூறப்பட்டது. ஆய்வுக்காக ஒரே ஒரு மாதிரியை மட்டும் எடுத்துக் கொண்ட அதிகாரிகள் எஞ்சியவற்றை  நாய் இறைச்சி என்றும் கெட்டுப்போன இறைச்சி என்றும் கூறி பினாயில் ஊற்றி மண்ணில் புதைத்தனர். 

  இதன் பிறகு பிடிபட்டது நாய் இறைச்சி இல்லை என்று இறைச்சி வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என்று அதிகாரிகள் உள்நோக்கத்தோடு தகவல் பரப்புவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். பிடிபட்டதை எங்கு வேண்டுமானாலும் சோதனைக்கு உட்படுத்தலாம் என்று ஆட்டு இறைச்சி தான் என்று அதனை உறுதிப்படுத்த தாங்கள் தயார் என்றும் அவர்கள் கூறினர்.

   இதனிடையே ராஜஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நாய் இறைச்சியை பிரபல உணவகங்கள ஆட்டு இறைச்சியாக விற்பனை செய்வதாக சந்தேகம் எழுந்தது- இதனை தொடர்ந்து கடந்த 17ந் தேதி முதல் சென்னையில் அசைவ உணவகங்களில் மட்டன் விற்பனை குறைந்ததுடன், வீடுகளில் மட்டன் வாங்கி சமைப்பவர்களும் சிக்கன் மற்றும் மீனுக்கு மாறினர்.

இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு அந்த இறைச்சி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 19ந் தேதி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆய்வு முடிவுகளை மருத்துவ கல்லூரி இன்று வெளியிட்டது. அதன்படி சென்னை எழும்பூரில் சிக்கிய இறைச்சி செம்மறி அல்லது வெள்ளாட்டு இறைச்சி தான் என்ற அந்த முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாய் இறைச்சி இல்லை என்றும் அந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.