கிருஷ்ணர் கோவில் முன்பு மாட்டுக்கறி, குடலை வீசிச் சென்ற பகீர் சம்பவம்..! பதற்றமாகும் கோவை..!

கோவையில் கிருஷ்ணர் கோவில் முன்புறத்தில் மாட்டுக்கறி மற்றும் குடலை வீசி சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கம் பொது முடக்கத்தை அறிவித்திருக்கிறது. இதனால் கோவில்களிலும் பக்தர்கள் வருகையையும் நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது. ஆகையால் கோயில்களில் பூஜை செய்பவர்கள் மற்றும் சுத்தம் செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவில்களுக்குள் பக்தர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்புத்தூரில் டவுன் ஹாலை அடுத்த சலிவன் வீதியில் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயில் ஒன்று அமைந்துள்ளது. அறநிலை துறையினரின் கட்டுப்பாட்டிற்கு கீழே இயங்கும் இந்த கோவிலில் வெறும் பூஜை செய்யும் பூசாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். கோவில்களில் இதுவரை பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில் இன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அந்த கோவிலுக்கு முன்புறத்தில் மாட்டு இறைச்சியும் குடலும் வீசப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தங்கள் கையிலிருந்த பாலித்தீன் பைகளில் இருந்த இறைச்சியை கோயில் வாசலில் தூக்கி வீசி சென்றிருக்கின்றனர்.

இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து வெரைட்டி ஹால் போலீசாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தில் கலவரம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அங்கு விற்பனை செய்த பெண்மணியிடம் விசாரித்த பொழுது, இன்று காலை மர்ம நபர்கள் இந்த இறைச்சியை வீசி சென்றனர் என்று தெரியவந்தது.

கோவிலில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படாத இருந்ததால் காவல் அதிகாரிகள் அருகில் இருந்த இடங்களில் விசாரணை செய்துள்ளனர். அப்படியாக விசாரிக்கும் பொழுது அருகில் இருந்து அபார்ட்மென்ட் ஒன்றில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை பயன்படுத்தி அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் யார் என்று விரைவில் கண்டறிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.