தாம்பூலப் பொருட்களில் வெற்றிலை, சீப்பு, கண்ணாடி, வளையல் கொடுக்கப்படுவது இதற்குத்தானா? ஆச்சர்ய தகவல்கள்!

பண்டிகை நாட்களில் வழங்கப்படும் தாம்பூலம் கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.


1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ஸ்லோக புஸ்தகம் 15. ரவிக்கைத்துணி அல்லது புடவை.

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர் மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது. சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக, கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க, வளையல், மன அமைதி பெற தேங்காய், பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்த தேங்காய் கொடுப்பதே நல்லது.)

பழம்,அன்னதானப் பலன் கிடைக்க, பூ, மகிழ்ச்சி பெருக, மருதாணி, நோய் வராதிருக்க, கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க, தட்சணை லக்ஷ்மி கடாட்சம் பெருக, ஸ்லோக புஸ்தகம் - வித்யா தான பலன் ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய வழங்குகிறோம்.

மனிதர்களிடையே பிறர்க்குக் கொடுத்து மகிழும் வழக்கம் வரவே இம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. காலப் போக்கில், ஆடம்பரத்திற்காகவும், தங்கள் வசதியைப் பிறருக்குக் காட்டவும் கொடுப்பதாக மாறி விட்டது சோகமே.

தாம்பூலம் வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத் திருப்தி செய்வதே. அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள். தேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும். வயதான சுமங்கலிகள், பெண்கள், குழந்தைகள் என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய பிரிவினை. இது தவிர்த்து, அந்தஸ்துவேறுபாடு,பழைய கோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு எந்தப் பலனும் இல்லை.

தாம்பூலம் வாங்கிக் கொள்பவர் அம்பாளின் சொரூபம். அம்பிகைக்குச் செய்யும் பூஜையாக நினைத்துத் தான் தாம்பூலம் தர வேண்டும். அவர் நமக்குப் பிடிக்காதவர் என்பதற்காக, உபயோகித்ததைத் தந்தால், பின் விளைவுகள் நமக்குத் தான்.

மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம். இல்லாதோர் வருந்த வேண்டியதில்லை. நம் எல்லோர் இதயத்துள்ளும் இருக்கும் தேவி, எல்லாம் அறிவாள்.

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும் ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா " என்கிறார் அபிராமி பட்டர்.

நவராத்திரிகளில் 'கன்யாபூஜை' செய்து, சிறு பெண்குழந்தைகளுக்கு போஜனம் அளித்து, நலங்கு இட்டு, உடை, கண்மை, பொட்டு, பூ, பழத்தோடு கூடிய தாம்பூலம் அளிப்பது அளவற்ற நன்மை தரும். அவர்களுக்கு நாம் அளிக்கும் பொருட்கள், நம் மூதாதையரைத் திருப்தி செய்து, நம் சந்ததியரை வாழ்வாங்கு வாழ வைக்கும்.

தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை (சுமங்கலிகளுக்குப் உணவளித்து, நலங்கு இட்டு, பின் தாம்பூலம் தருதல், இதையே சற்று விரிவாக, 'சுமங்கலிப் பிரார்த்தனை எனச் செய்கிறோம்) முதலியவையும் சிறந்தது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தாம்பூலம் கொடுப்பதாலும் பெறுவதாலும் சுபிட்சம் விளையும். சிலர், சுபகாரியத் தடை நீங்க பூஜைகளும் பரிகாரங்களும் செய்பவர்கள் தாம்பூலம் தந்தால் பெறுவதில்லை. அந்த தோஷங்கள் தம்மைத் தொடரும் என்ற பயமே காரணம். அடுத்தவருக்கு நன்மை தராத எந்தச் செயலும், சம்பந்தப்பட்டவருக்கு நன்மை அளிப்பதில்லை என்பதை உணர வேண்டும்.

எல்லா உயிர்களிலும் தேவியின் அம்சம் உள்ளது. ஆகவே, யாராவது தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்தால், கட்டாயம் போக வேண்டும். வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்தாலும் அலட்சியப்படுத்தாமல் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

பண்டிகை நாட்களில் பலரும் கூடி இருக்கும் நேரத்தில், கணவனை இழந்த பெண்கள் இருந்தால் அவர்கள் மனம் நோகாமல், அன்பளிப்புப் பொருட்களை வழங்கி,அவர்களை நமஸ்கரித்து, அவர்கள் ஆசியைப் பெறுவது சிறந்தது.