தெய்வங்களின் அவதார மகிமை இதுதான்!

‘அவதாரம்’ என்றால் கீழே இறங்கி வருதல் என்று பொருள்.


இங்கு எல்லாம்வல்ல இறைவன், உயிர்களைப் பாதுகாப்பதற்காக உருவம் எடுத்துக்கொள்கிறார். இறைசக்தி என்பது ஒன்றே. ஒரே சக்தியே பல வடிவங்கள் எடுத்து அருள்செய்கின்றன. அவற்றுள் பகவான் தசாவதாரங்களில் அருள் செய்விப்பதைப் புராணங்கள் போற்றுகின்றன. இந்தப் பத்து அவதாரங்கள்தாம் பிரசித்தமானவை.

இன்னும் பல அவதாரங்களை பகவான் எடுத்திருக்கிறார். என்று எப்போதெல்லாம் தர்மத்துக்குத் தீங்கு விளைவிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தோன்றி நல்லவர்களைக் காப்பாற்றுவதாக பகவான் வாக்களித்துள்ளார் (யதா யதா ஹி தர்மஸ்ய...).

எல்லாம்வல்ல பராசக்தியானவள், எப்போதெல்லாம் தீமைகள் அதிகமாகின்றனவோ, அப்போதெல்லாம் அவற்றைப் போக்குவதற்கு வருவேன் என்று மார்க்கண்டேய புராணத்தில் கூறியிருக்கிறாள் (இத்தம் யதா யதா பாதா...). இதுபோன்று பல புராணங்களை நாம் உற்றுநோக்கினால், அந்தந்தப் புராணத்துக்கு உரிய தெய்வ சக்திகள், உயிர்களுக்குத் தீங்கு ஏற்படும்போதெல்லாம் அவற்றைக் காப்பாற்றுவதாக உறுதியளித்திருப்பதைக் காணலாம்.

எனவே, அவதாரங்களில் நமக்கு மிகவும் பிரசித்தமாகத் தெரிந்தவை தசாவதாரங்கள் என்று கூறலாமே தவிர, பத்து அவதாரங்கள்தாம் இதுவரை ஏற்பட்டுள்ளன என்று சொல்ல இயலாது. அனைத்து தெய்வ சக்திகளும் தேவையான நேரங்களில் நல்லவர்களைக் காக்க அவதாரங்கள் எடுத்து அருளியிருப்பதைப் புராணங்களும் இதிகாசங்களும் விளக்குகின்றன.