துல்லிய பலன்களுக்கு நவாம்சமே முக்கியம்..! ஏனென்று தெரியுமா?

நவாம்சம் என்பது ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம், அதன் எந்த பகுதியில் உள்ளது? என்பதைக் காட்டுவது ஆகும்.


உண்மையில் ராசி சக்கரம் என்பது கிரகங்களின் நிஜமான தோற்றம் ஆகும். நவாம்சம் என்பது அதனுடைய நிழல்தான் என்று கூறலாம். ஒரு கிரகத்திற்கு கிடைத்திருக்கும் சுப, அசுப வர்க்கங்களை கணிக்க மட்டுமே நவாம்சம் சொல்லப்பட்டது. அதில் கிரகங்களுக்கு பார்வை இல்லை. மறைவு ஸ்தானங்களும் இல்லை. ஆனால் சேர்க்கை வர்க்கோத்தமம் போன்றவைகள் உண்டு.

நவாம்சம் உள்ளிட்ட வர்க்கச் சக்கரங்கள் என்பது கிரகங்கள் வான்வெளியில் இருக்கும் துல்லிய நிலையை கணிப்பதற்காக சொல்லப்பட்டவை. பூமியைச் சுற்றி 360 டிகிரி அளவில் வியாபித்திருக்கும் இந்த பரந்த வான்வெளியில் ஒரு ராசி என்பது முப்பது டிகிரியை தன்னகத்தே கொண்ட ஒரு பகுதியாகும். இந்த முப்பது டிகிரிக்குள்ளும் கிரகங்கள் எங்கே, எந்த இடத்தில், எந்த நிலையில் இருக்கின்றன என்பதை மிகச் சரியாகக் கணக்கிட ஞானிகள் வர்க்கச் சக்கரங்களை பகுத்தறிந்தார்கள்.

30 டிகிரி கொண்ட ஒரு ராசி வீட்டினை, மேம்பட்ட கணித முறைப்படி நீங்கள் 300 பங்காகக் கூடப் பிரிக்க முடியும். அவ்வாறு பிரித்துக் கொண்டே உள்ளே செல்லும்போது இந்த பரந்த வான்வெளியில், ஜாதகர் பிறக்கும்போது ஒரு கிரகம் எந்த இடத்தில், என்ன நிலையில் இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிய முடியும்.

ஒரு ராசியை தலா 15 டிகிரி அளவாகக் கொண்டு, இரண்டு சமமான பங்குகளாக்கி ஒரு கிரகத்தின் நிலை அறிவது ஹோரா சக்கரம் எனப்பட்டது. தலா பத்து டிகிரி அளவாக மூன்று பகுதிகளாகப் பிரித்து கிரகநிலை அறிவது திரேக்காணம் எனப்பட்டது. 7 பங்கு சம அளவாக பிரிப்பது சப்தாம்சம் எனவும், 10 பங்காக பிரித்து பலன் அறிவது தசாம்சம் எனவும் சொல்லப்பட்டது.

ஒரு ராசியை இவ்வாறு பிரிப்பது வர்க்கச் சக்கரங்கள் எனப்பட்டன. அனைத்து வர்க்கச் சக்கரங்களிலும் ராசியை ஒன்பது பங்காகப் பிரிக்கும் நவாம்சம் மட்டும் முதன்மையாக கருதப்படுவதற்கு காரணம், ஒரு மனிதனின் வாழ்வியல் சம்பவங்களை நடத்தும் கிரகங்கள், அதற்கு அடிப்படை மூல காரணமான எந்த நட்சத்திரத்தின், எந்தப் பகுதியில் இருந்து ஒளியைப் பெறுகிறது என்பதை நவாம்சத்தில் சுலபமாக அறிய முடியும் என்பதே ஆகும்.

நவாம்சத்தின் முக்கியத்துவம் என்னவென்று பார்க்கப்போனால், ராசிக்கட்டம் என்பது ஒன்பது கிரகங்களும் அமர்ந்திருக்கும் 27 நட்சத்திரங்களின் தலா 4 பாதங்கள் உள்ளிட்ட மொத்தம் 108 பாதங்களை அளவாக கொண்டது. அதாவது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குள் அடங்கி இருக்கும் பாதங்களை மொத்தமாக கணக்கிட்டால் அவை 108 ஆக வரும்.

ஒரு நட்சத்திரத்தை நான்கு பிரிவுகளாக்கி, அவற்றைப் பாதங்கள் என்று சொல்லி ஒரு நட்சத்திரத்தின் அளவையும், இருப்பையும் சற்றுச் சுருக்கி இன்னும் துல்லியமாக்கப் பட்டதே இந்த பாதங்கள் என்பவை.

நவாம்ச சக்கரத்தில் ஒன்பது முறை சுற்றி வரும் ஒன்பது முழுச் சுற்றுகள் கொண்ட 108 பாதங்களில், ஒரு கிரகம் எந்த நிலையில், எங்கே அமர்ந்திருக்கிறது என்பதை வைத்தே அந்த ஜாதகருக்கு நன்மை, தீமைகள் நடக்கின்றன. நவாம்சத்தை வைத்து ஒரு கிரகம் எந்த நட்சத்திர பாதத்தில் உள்ளது என்பதை துல்லியமாக சொல்லலாம். அந்த நட்சத்திரம் ஜாதகருக்கு நன்மையை தருமா, தீமையைச் செய்யுமா என்பதை வைத்து பலனையும் சொல்லி விட முடியும் என்பதே நவாம்சத்தின் சிறப்பு. இதற்காக மட்டும்தான் ராசியின் அருகில் நவாம்சமும் குறிக்கப்படுகிறது. மேலும் நவாம்சத்தை வைத்து திருமண வாழ்க்கையை பற்றிய துல்லியமான பலன்களை கூறமுடியும்.