ஜோதிட கோச்சாரம் தெரியுமா? இதனால் பாதிப்பு ஏற்படுமா?

கோச்சாரம் = கோள் + சாரம். கோள் என்றால் கிரகம்; சாரம் என்பது வடமொழி சொல், அதற்கு தமிழில் நகர்தல் என்பது பொருள் ஆகும்.


ஒரு குறிப்பிட்ட தினத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை பற்றி தெரிவிப்பது தான் கோச்சாரம் ஆகும். அதாவது வான்மண்டலத்தில் அப்பொழுதுள்ள கிரக நிலைகளைப் பற்றி தெரிவிப்பதே கோச்சாரம் என்று அழைக்கப்படுகிறது..

ஒரு குழந்தை பிறக்கின்ற நேரத்தில் வான் மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் விதி அமைகிறது. ஒவ்வொருவரது ஜாதகத்திலும் இந்த விதிப்படி ஒரு சில கிரகங்கள் பாதகமாகவும் (தீமை பயக்கும் கிரகங்களாகவும்), மற்ற கிரகங்கள் சாதகமாகவும் (நன்மை பயக்கும் கிரகங்களாகவும்) அமைகின்றது. அதாவது, ஒருவர் பிறந்த நேரப்படி பாதகமான நிலையில் உள்ள கிரகங்கள் தீமையான பலன்களையும், சாதகமான நிலையில் உள்ள மற்ற கிரகங்கள் நன்மையான பலன்களையும் அளிக்கும்.

வேகமாக சுற்றும் கிரகம்: வேகமாக சுற்றும் (நகரும்) கிரகங்களான சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் கோச்சாரத்தில் எப்படி இருந்தாலும் அதற்கு வகுக்கப்பட்ட காரக விஷயங்களில் பாதிப்பினை உண்டாக்காது.

இது போன்ற கிரகங்களுக்கு வகுக்கப்பட்ட காரகங்களின் பலன்களை காண ஒருவரின் விதியை மட்டும் ஆய்வு செய்தால் போதும்.

மெதுவாக சுற்றும் கிரகம்: அதேசமயம் மெதுவாக சுற்றும் (நகரும்) கிரகங்களான குரு, ராகு, கேது மற்றும் சனி கோச்சாரத்தில் தீமை செய்யக்கூடிய கிரகங்களின் நட்சத்திரத்தில் செல்லும் பொழுது அதற்கு வகுக்கப்பட்ட காரக விஷயங்களில் நிச்சயம் சிறிதளவாவது தடையினை ஏற்படுத்தும்.

ஆனால், இந்த கோச்சாரத்தால் ஏற்படும் தடை என்பது சிறிதளவாகத்தான் இருக்குமே தவிர பெரிய பாதிப்பினை ஏற்படுத்தாது. மேலும் ஒருவரின் ஜாதகத்தில் விதி கொடுப்பினை அதிவலுவுடன் காணப்பட்டால் இந்த கோச்சாரத்தால் பாதிப்பு வர சிறிதும் வாய்ப்பில்லை.

கோச்சார பலன் ஜாதகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கிரகங்கள் எங்கு இருக்கின்றன, அதாவது எந்த ராசியில் எந்த கிரகம் சென்று கொண்டிருக்கிறது, அதனால் ஜாதகருக்கு என்ன பலன் என்று பார்ப்பது கோச்சார பலன் என்கிறோம்.