விநாயகப் பெருமான் யானை முகத்துடன் காட்சி அளிப்பது ஏன் தெரியுமா?

வேழ முகமும் விளங்குசிந்தூரமுமாகத் திகழும் கணபதியின் வடிவம் ஆழ்ந்த தத்துவத்தை நமக்கு போதிக்கின்றது.


பிள்ளையாரின் பெரிய காதுகள் -  நிறைய கேட்க வேண்டும் எனவும், வாயை மறைக்கும் துதிக்கை குறைவாக பேச வேண்டும் என்பதையும், பெரியவர்களிடம் ஞான உரைகளைக் கேட்கும்போது (கையால் வாயை பொத்தி) பணிவோடு கேட்க வேண்டும் என்பதையும், பேசுவதில் கவனம் கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றன.

சிறிய கண்கள் எதையும் கூர்ந்து நோக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

பேழை வயிறு எனப்படும் விநாயகரின் வயிற்றில் அண்டப் பொருளனைத்தும் அடக்கம். பக்தர்களின் பாவங்கள் அனைத்தையும் ஜீரணிக்கும் பெருவயிறு என்பார்கள். வயிறு தன்னிடம் வரும் உணவை செரிக்க வைத்து இரத்தமாக மாற்றி தானே அதை வைத்துக் கொள்ளாமல் உடல் முழுவதும் அனுப்பி உயிர் வாழ உதவுகிறது. அதுபோல மனிதன் தன்னுடையது என்று சுயநலம் இல்லாமல் எதையும் பிறருக்கு தந்து உதவ வேண்டும் என்பதே உணர்த்தவே அமைந்தது.

அவர் வைத்திருக்கும் ஆயுதங்கள் ஐந்தொழிலை உணர்த்துகின்றன. அவரது பாசம் படைத்தலையும், அங்குசம் அழித்தலையும், ஒடிந்த தந்தம் காத்தலையும், துதிக்கை மறைத்தலையும், மோதகம் அருளலையும் உணர்த்தி நிற்கின்றன.

பிள்ளையார் பிரம்மச்சாரி என்று சொல்லப்பட்டாலும் வல்லப கணபதி, சித்திபுத்தி கணபதி, சக்தி விநாயகர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். ஆனால் இவருடைய பத்தினிகளாகக் காணப்படுவார்கள் எல்லாம் உண்மையான பெண்களல்ல. பிள்ளையாரின் ஆற்றலே இவ்வாறு உருவகம் செய்யப் பட்டுள்ளது. வல்லபை என்பது எல்லாவற்றையும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர் என்பதை குறிப்பது. சித்திபுத்தி என்றால் அறிவும் ஆற்றலும்.

விநாயகரின் பிள்ளைகளாக சொல்லப்படுபவர்களின் பெயர்கள் சுபன், லாபன். அறிவும் ஆற்றலும் உங்களுடையதாக இருந்தால் சுபமும், லாபமும் உங்களுக்கு கிடைக்கும். அதனால் சந்தோஷம் ஏற்படும். அதனால்தான் பிள்ளையாரின் புதல்வி பெயர் சந்தோஷி.

பிள்ளையாரின் வாகனம் மூஞ்சுறு. எளிமையாக இருந்தால் எத்தகைய பெரும் பிரச்சினையும் தாங்கும் வலிமை வந்துவிடும் என்பதுதான் கணபதிக்கு எலி வாகனமாக இருப்பதன் தத்துவம்.