நான் தான் அடுத்த பிரதமர்! மாயாவதி போடும் புதுக் கணக்கு! அதிர்ச்சியில் அகிலேஷ்!

லக்னோ: '' நினைத்தபடி எல்லாம் சரியாக நடக்கும்பட்சத்தில், இந்திய பிரதமர் பதவியை நான் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது,'' என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.


பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.  இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய அவர், நினைத்தபடி எல்லாம் சரியாக நடந்தால், நான் பிரதமர் பதவியை ஏற்கவும் வாய்ப்புள்ளது, என்றார். 

உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் தொகுதியில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிடும் சூழல் தனக்கு ஏற்படலாம் எனவும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசியலுக்கு செல்ல வேண்டியுள்ளதால், அம்பேத்கர் நகர் மக்களவைத் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது, என, மாயாவதி கூறியுள்ளார். 

மேலும், ''நமோ நமோ என நாடு முழுவதும் ஒலித்த மந்திரம் அடங்கிவிட்டது. இனி ஜெய் பீம் என்ற மந்திரத்தை இந்நாடு உச்சரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,'' என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மார்ச் மாதத்தில், பிரதமர் பதவிக்காக, தனக்கு உள்ள ஆசை பற்றி மாயாவதி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது, 1995ம் ஆண்டு உத்தரப் பிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது, எம்எல்ஏ அல்லது எம்எல்சி பதவி எதுவும் வகிக்கவில்லை.

பிறகுதான், தேர்தலில் போட்டியிட்டேன். அதுபோலவே, எதிர்காலத்தில் பிரதமர் பதவியை கைப்பற்றவும் நேரிடலாம். அதன்பின், எனது கட்சி எம்பி.,க்கள் யாரையேனும் ராஜினாமா செய்ய சொல்லி, அந்த தொகுதியில் இருந்து போட்டியிட்டு, நான் வெல்வேன், என மாயாவதி குறிப்பிட்டிருந்தார். இதற்கு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வரவேற்பு தெரிவித்திருந்தார். தற்சமயம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்து, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பிரதமராக மாயாவதி விருப்பம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் மாயாவதியை பிரதமராக்கவா நாம் கூட்டணி வைத்துள்ளோம் என்று அவரது கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதனால் உள்ளடி வேலைகள் ஜரூராக நடைபெறும் என்று பாஜக மகிழ்ச்சியில் உள்ளது.