தீராத நோயா? மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை..! அடுத்த அதிரடி திட்டத்தால் நெகிழ வைக்கும் ஜெகன்!

தீர்க்கமுடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.


சென்ற மே மாதம் ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் பதவியேற்றார். பதவியேற்ற தொடக்கத்திலிருந்து மாநில மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். பதவியேற்பு விழாவிலேயே முதியோர்களுக்கு மாதம் 2,250 ரூபாய் வழங்கப்படும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

ஆட்டோ ஓட்டுநர்களின் பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்காக ஓய்வூதியமாக அவர்களுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாய் வழங்கும் பணியை மேற்கொண்டார். ஆஷாரா என்ற திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளருக்கு 3000 ரூபாய் உதவித் தொகையாக அளிக்கப்பட்டு வந்தது. அதனை 10,000 ரூபாயாக மாற்றி அமைத்தார். பத்திரிக்கையாளர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் காப்பீடு முறையை அறிமுகப்படுத்தினார். 

மணல் கொள்ளையை தடுப்பதற்காக மணல் கொள்முதல் பணியை ஆன்லைனில் அறிமுகப்படுத்தினார். மாணவ மாணவிகளுக்கு உறைவிடம், உடை ஆகியவற்றை வழங்குவதற்கு 20,000 ரூபாய் உதவித்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து வந்த ஜெகன்மோகன் ரெட்டி தற்போது மேலும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். தலசீமியா, அனிமீயா, ஹிமோஃபீலியா போன்ற நோய்களால் நீண்ட காலங்களாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும், சிறுநீரக பாதிப்புகள் கை,கால் முடங்கி சக்கர நாற்காலியில் வாழ்நாளை செலவழிப்பவர்கள் ஆகியோருக்கு 5,000 ரூபாய் உதவி தொகையையும் அறிவித்துள்ளார். இத்தகைய சலுகைகளைப் பெறுவதற்காக உள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களிடம் இருந்து சான்றிதழ் பெற்று அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவற்றை வரும் வாக்குறுதிகளாக மட்டுமே கருதாது பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ள ஜெகன்மோகன் ரதியும் செயல்பாடுகள் அவரை அரசியலில் நீண்ட தூரத்திற்கு அழைத்துச் செல்லும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.