அவங்க பசியோட இருப்பாங்க..! தாம்பூழத்திற்கு பதில் எழைகளுக்கு நிவாரணம் வழங்கிய புதுமண ஜோடி!

ஊரடங்கினால் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட புது தம்பதியினர் 300 பேருக்கு நிவாரணம் அடங்கிய தாம்பூலப்பை கொடுத்திருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட சுண்டங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவியின் பெயர் சொர்ணலதா. இவர்களுக்கு மோனிஷா என்ற மகளுள்ளார். இதனிடையே மோனிஷாவிற்கு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள  குட்டம் கஸ்பாவை சேர்ந்த உதயச்சந்திர மார்த்தாண்டன், கலைமதி ஆகியோரின் மகன் அருண் சுந்தரமார்த்தாண்டனை மணமகனாக தேர்ந்தெடுத்து இருந்தனர்.

இவர்களுடைய திருமணமானது நேற்று கோலாகலமாக நடைபெற்றிருக்க வேண்டியது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலினால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெருங்கிய உறவினர்கள் 30 பேர் மட்டுமே  திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலும் என்று அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதன்படி இருவீட்டாரும் பேசி முடிவெடுத்து சுண்டங்கோட்டை கிராமத்திலேயே நெருங்கிய உறவினர்களுடன் திருமணத்தை நடத்தி முடித்து விடலாம் என்று முடிவெடுத்தனர். அதன்படி நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி நேற்று இருவருக்கும் திருமணம் செய்து முடிக்கப்பட்டது.


1,500 பேர் கலந்து கொள்ள வேண்டிய திருமணத்தில் வெறும் 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் சொந்த ஊரிலேயே திருமணத்தை செய்து விட்டு, தன் ஊர் மக்களுக்கு உணவு வழங்க இயலவில்லையே என்று பெண்வீட்டார் மிகவும் வேதனைப்பட்டனர்.

வேதனையை நீக்கும் வகையில், பெண் வீட்டார், தங்களுடைய ஊரில் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வரும் 300 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், காய்கறிகள், சானிடைசர், மாஸ்க் முதலியவற்றை அடங்கிய ஒரு தொகுப்பு பையை வழங்க முடிவு எடுத்தனர். இதற்கான முறையான அனுமதியை தாசில்தாரிடமிருந்து பெற்றனர்.

திருமணம் முடிந்தவுடன் இந்தத் தொகுப்பு பையை தாசில்தார் ராஜலட்சுமி வழங்கி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் புதுமண தம்பதியினர் 10 பேருக்கு இந்த தொகுப்பு பையை வழங்கினர். அதன் பின்னர் நாங்கள் வீடு வீடாக சென்று 300 குடும்பங்களுக்கு தொகுப்பு பையை வழங்கினர் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்வானது அந்த கிராமத்தில் அனைவருக்கும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே மணமக்களை மனதார வாழ்த்தினர்.