மரணத்திற்குள் நாம் பார்க்கவேண்டிய திரைப்படம் - இன்செப்சன்!

ஜக்கம்மா சொல்லும் கனவுகளையும் அதன் பலனையும் வைத்து தமிழில் படம் எடுக்கும்போது, கனவு பற்றி எக்குத்தப்பாக ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறார் நோலன். நினைத்துப்பார்க்க முடியாத சிந்தனையே அபூர்வமானது, அதனை படமாக்கும் துணிச்சல் நோலனுக்கு மட்டுமே சொந்தம். வித்தியாசமான கதைக்களன் என்ற வகையில் இன்செப்ஷன் ( INCEPTION ) மிகவும் முக்கியமான படம்.


 டைட்டானிக் பட நாயகன் லியோனார்டோ டி காப்ரியோ  இந்தப் படத்தில் கனவுத்திருடனாக நடித்திருக்கிறார். பிறருடைய கனவுக்குள் நுழைந்துஅவர்களின் மூளைக்குள் இருக்கும் ரகசியங்களைத் திருடிவரும்  குட்டியூண்டு(?) திருடனாக இருக்கிறார். ஒரு வரியில் சொல்வது போல் கனவுக்குள் நுழைவது அப்படியொன்றும் எளிதான வேலை அல்ல. இந்தப் பணியில் இறங்கியதால், ஆசை மனைவியை இழந்து சட்டச்சிக்கலிலும் மாட்டியிருக்கிறார். இந்த நேரத்தில்தான் ஒரு  கும்பல் இவரிடம் பேரம் பேசுகிறது.

கோடீஸ்வர அப்பா சாகக் கிடப்பதால் அடுத்து பொறுப்பு ஏற்க இருக்கும் இளைஞன் கனவில் புகுந்து, ‘இந்த பிசினஸ் இனி சரிப்படாதுஎன்று இழுத்து மூடுவதற்கான எண்ணத்தை விதைக்க வேண்டும் என்ற  வேலையை செய்யச்சொல்லிக் கேட்கிறார்கள்.  அப்படிச் செய்தால் காப்ரியோவுக்கு இருக்கும் அத்தனை சிக்கல்களில் இருந்தும் காப்பாற்றுவதாக  உறுதியளிக்கிறார்கள்.இளைஞனின் கனவுக்குள் நுழைந்தால் மட்டுமே போதாது, கனவுக்குள் நுழைந்து அவரைத் தூங்கச்செய்து அடுத்த கனவு வரவழைத்து அந்தக் கனவுக்குள் நுழைந்து (தலை சுற்றுகிறதா?) மூளையில் எண்ணங்களை விதைக்க வேண்டும். இதனை எல்லாம் ஒரு விமானப்பயணத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றாலும் ஒப்புக்கொள்கிறான் காப்ரியோ.

கனவுக்குள் நுழைவதைவிட, கனவில் இருந்து வெளியே வருவது மிகவும் சிரமம். கனவுக்குள் இறந்துவிட்டால் அல்லது  அடிபட்டால் நிஜவாழ்க்கையில் விழிப்பு வந்துவிடும். அதேபோன்று  இப்போது கனவுலகில் இருக்கிறோமா அல்லது நிஜவுலகில் இருக்கிறோமா என்பதை அறிந்துகொள்வதற்காக கையில் ஒரு பொருளுடன் கனவுக்குள் நுழையவேண்டும். ஆனாலும் கனவில் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டத்தில் நுழையும்போது மரணம் ஏற்பட்டால் நிஜவாழ்க்கையில் கோமாவை சந்திக்கவேண்டி வரலாம். கனவுக்குள் செல்லவேண்டிய இடங்கள் குறித்து வரைபடம் வரைந்துதரும் தோழி எலன் பேஜ் மற்றும் டாம் ஹார்டியுடன் இணைந்து காரியத்தில் இறங்குகிறான் டிகாப்ரியோ.

காப்ரியோ இளம் தொழிலதிபர் கனவுக்குள் நுழைந்து அவனை அடுத்தகட்ட கனவுக்குள் அழைத்துச்செல்ல முயற்சி செய்கிறான். ஆனால் அவன் வித்தகனுக்கு எல்லாம் வித்தனாக இருக்க்கிறான். ஆம், கனவுக்குள் யாரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஒரு காவலன் வைத்திருக்கிறான். அவன் பணக்கார இளைஞன் கனவுக்குள் நுழைந்து காவல் காக்கிறான்.

இவனை மீறி அந்த இளைஞனின் கனவுக்குள் நுழைந்து நினைத்ததை சாதித்தானா என்ற பதைபதைப்பு ஒரு பக்கம் இருக்கும்போது, கனவுக்குள் நுழைந்துவிட்ட காப்ரியோ, இதுதான் நிஜம் என்று ஒரு கட்டத்தில் வாழத்தொடங்குகிறான்அவனுக்குள் கனவு என்ற நிஜத்தை விதைத்து மீண்டும் நிஜ வாழ்க்கைக்கு இழுத்துவர தோழியும் காதலியுமான எலனால்  முடிந்ததா என்பதை படத்தில் பாருங்கள்.

இந்தப் படத்தின் திரைக்கதையில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருப்பதை எல்லோருமே கவனிக்க முடியும் என்றாலும் படத்தின் விறுவிறுப்பில் அவை மாயமாய் மறைந்துவிடுகிறது. நோலனின் கனவுக்குள் நுழைந்துபாருங்கள், புதிய சினிமா தரிசனம் கிடைக்கும்.

சினிமாவை விட்டுத்தள்ளுங்கள். உண்மையிலேயே பிறர் கனவுக்குள் நுழைய முடிந்தால் எப்படியிருக்கும் என்று இந்த படம் பார்த்ததும் கற்பனை செய்யாமல் இருக்கமுடியாது. மனைவியை தினமும் கால் அமுக்கிவிடும்படி செய்யமுடியும், முதலாளியை விரும்பும் நேரத்தில் எல்லாம் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கொடுக்கச்செய்ய முடியும். இதையெல்லாம்விட  ஆசைப்பட்டவர்களை எல்லாம்  ‘ லவ் யூசொல்லவைக்கலாம்…. 

பின்குறிப்பு  :

  • 2001-ம் ஆண்டுஇன்செப்ஷன்படத்தின் கதையை எழுதிவிட்டாலும், இதனை மேலும் மேலும் மெருகேற்றி படமாக்கி வெளியிட கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் நோலன்.
  • இந்தக் கதையின் மீது லியோனார்டோ டி காப்ரியோவுக்கு ஆரம்பத்தில் பெரிய நம்பிக்கை இல்லையாம். கதை விவாதத்தில் அமர்ந்ததும், கதைகுள் மூழ்கி விவாதத்தில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்.
  • இந்தப் படத்தில் எலன் பேஜ் அழகுப் பொம்மையாக வந்திருந்தாலும், நோலனின் தேர்வு இவர் அல்ல. எமிலி பிளன்ட், ரேய்ச்சல் மெக் ஆடம்ஸ், டெய்லர் ஸ்விப்ட், எம்மா ராபர்ட்ஸ், ஜெஸ்ஸி ஷெரோம் ஆகிய நடிகைகளை எல்லாம் தேடிவிட்டு கடைசியாகத்தான் எலன் பேஜ் செட்டானார்.
  • இந்தப் படம் புதிதாக தெரியவேண்டும் என்பதற்காக அனமார்பிக் ஃபார்மெட் முறையில் 35 எம்.எம். ஃபிலிமிலும், முக்கியமான காட்சிகளை 65 எம்.எம். ஃபிலிமிலும் படமாக்கினார் நோலன். இல்லூசன் எனப்படும் பரிமாணக் காட்சிகளே இந்தப் படத்துக்கு ஆதாரம் என்கிறார்.
  • ஏராளமான குறைகள் படத்தில் தென்பட்டாலும் பிரபல ஆங்கில சினிமா விமர்சகர்களின் டாப் 10 பட்டியலில் இந்தப் படத்துக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.