மரணத்திற்குள் நாம் பார்க்கவேண்டிய திரைப்படம் - ஏ வால்க் டூ ரிமெம்பர்!

இஷ்டப்பட்டு கஷ்டப்படுவது என்று சொல்லப்படும் காதலுக்கு அற்புதமான உதாரணம் எ வாக் டு ரிமெம்பர் ( A WALK TO REMEMBER ). டீன் ஏஜ் பருவத்தினரை மட்டுமின்றி முதியோரையும் மயக்கிவிடும் காதல் இந்தப் படத்தில் தளும்பித்தளும்பி வழிகிறது.


பள்ளியிலேயே  கெத்துப்பையன் என்றால் லேண்டன் மட்டும்தான். அவனுடன் சேர்ந்து சுற்றுவதற்கு பெண்கள் மட்டுமின்றி பையன்களும் துடிக்கிறார்கள். கொண்டாட்டமும் கும்மாளமுமாய் திரியும் அந்த கும்பலின் அட்டகாசத்தில், எதிர்பாராத ஓர் அசம்பாவிதம் நிகழ்கிறது. அதற்குத் தண்டனையாக மாணவர்களுக்கு டியூஷன் சொல்லித்தரவும், இசை நாடகத்தில் நடிக்கவும் லேண்டன் அனுப்பப்படுகிறான். அலுப்பூட்டும் இந்த விஷயங்களைச் செய்வதற்காக வகுப்பில் படிக்கும் ஜெமியின் உதவியை நாடுகிறான் லேண்டன்.



அழுக்குப்பெண், முட்டாள், அழகில்லாதவள், பழகத்தெரியாதவள் என்று மாணவ, மாணவியரால் ஒதுக்கப்படும் ஜெமியோ, ‘உனக்கு நான் உதவவேண்டும் என்றால் நீ என்னை காதலிக்க மாட்டேன்என்று சத்தியம் செய்துதர வேண்டும்என்கிறாள். கொலைவெறிக்கு ஆளாகிறான் நாயகன் லேண்டன். ஏனென்றால் அவனுக்குப்பின்னே  நாக்கைத் தொங்கப்போட்டு சுற்றும் உலக அழகிகளையே அவன் மதிப்பதில்லை. ஆனாலும் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட கடுப்பை மனதில் மறைத்துக்கொண்டு சம்மதம் சொல்கிறான்.

இருவரும் பழகத் தொடங்குகிறார்கள். அவளது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புதுப்புது அர்த்தத்தையும் அழகுணர்ச்சியையும் கண்டு வியக்கிறான் லேண்டன். யாருக்கும் தெரியாமல் ஜெமி தனக்குள் அழகையும் திறமையையும் புதைத்துவைத்திருப்பதை அறிகிறான். உச்சகட்டமாக நாடகம் அரங்கேறும்போது அவளது அழகையும் குரலையும் கண்டு மெய்சிலிர்த்து தன்னைமீறி முத்தமிட்டு விடுகிறான். தன்னை அறியாமல் காதலில் விழுந்துவிட்டதை உணர்ந்து உணர்வுபூர்வமாக சொன்னாலும் கோபமாகிறாள் ஜெமி. நீ நமது ஒப்பந்தத்தை மீறிவிட்டாய் என்று விலகிச்செல்கிறாள்.

ஜெமி விலகிச்செல்லும் ஒவ்வொரு நொடியும் காதலில் நெருங்குகிறான் லேண்டன். ஜெமியின் தந்தையிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் இவர்களது காதலை ஏற்க மறுக்கிறார். ஆனாலும் மனம் தளராமல் முயற்சிக்கிறான். ஜெமியின்  வித்தியாசமான பல ஆசைகளை நிறைவேற்றி ஜெமியை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான். அதனால் மனம் நெகிழும் ஜெமி, ‘நான்  இப்போது கடவுள் மீது பெரும் கோபத்தில் இருக்கிறேன். நானும் உன்னை காதலிக்கிறேன். ஆனால் என்னால் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கமுடியாது. புற்றுநோய் முற்றிவிட்டதுஎன்ற உண்மையைப் போட்டு உடைக்கிறாள்அதிர்ச்சி அடைந்தாலும் ஜெனியைக் காப்பாற்ற பெருமுயற்சிகள் செய்கிறான் லேண்டன். வசதியான தன் தந்தையின் உதவியை நாடுகிறான். எதுவும் வேண்டாம் என்று ஏற்க மறுக்கிறாள் ஜெனி. மரணம் நிச்சயம் என்றாலும்  திருமணம் செய்துகொள்கிறார்கள்.



மேற்படிப்பு முடிந்து ஒரு மருத்துவராக  ஜெனி இல்லாத வீட்டுக்குத் திரும்ப வருகிறான் லேண்டன்.  ‘உன்னுடைய நிறைய ஆசைகளை நிறைவேற்றினேன். ஆனால் வாழ்நாளில் ஏதேனும் ஓர் அதிசயத்தை நிகழ்த்த ஆசைப்பட்டாய். அதுதான் நடக்கவில்லைஎன்று வருத்தப்படுகிறான்.

அதைக் கேட்கும் ஜெனியின் அப்பா, ’அதுவும் நடந்துவிட்டது. நீதான் அந்த அதிசயம். லட்சியமற்ற இளைஞனாக இருந்த உன்னை உன்னத மனிதனாக மாற்றியிருக்கிறாள்என்கிறார். அதனை உணரும் லேண்டன் ஜெனியின் புகைப்படத்தைப் பார்க்க, கண்ணீர் திரையிட்டு படம் முடிகிறது.



 

பின்குறிப்பு : 

  • நிக்கோலஸ் பார்க்கஸ் எழுதிய கதையைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டது. நிக்கோலஸின் சகோதரி உண்மையிலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது நிஜ வாழ்க்கையைத்தான் நாவலில் எழுதியிருந்தார்.  சினிமா திரைக்கதைக்காக நிறைய காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  
  • 2002-ம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம். உண்மையாக 1950ம் ஆண்டு கதை நடப்பதுபோல் அமைக்கப்பட்டிருந்தாலும், 1990ம் ஆண்டு நடப்பதாக படமாக்கப்பட்டுள்ளது.
  • நடிப்பு என்று தெரியாதபடி நிஜமாகவே வாழ்ந்துகாட்டிய நாயகன் ஸென் வெஸ்ட், நாயகி மேண்டி மோர் ஆகியோருக்கு இந்தப் படம் ஏராளமான விருதுகளை அள்ளிக்கொடுத்தது.
  • இந்தப் படத்தை இயக்கிய ஆடம் சாங்மென் நடிகராகவும் டான்ஸராகவும் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்கள் இன்றும் ரசிக்கப்படும் அளவுக்கு சிறப்பாக அமைந்துள்ளன.