திடீர் நெஞ்சுவலி..! ஹாஸ்பிடலில் அனுமதி..! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தீவிர சிகிச்சை!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


87 வயதாகும் மன்மோகன் சிங் நேற்று இரவு எட்டரை மணி அளவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து உடனடியாக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் இருந்தாலும் மன்மோகன் சிங் ஐசியுவில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை பிரதமர்பதவி வகித்துள்ள மன்மோகன் சிங் கடந்த 1990 மற்றும் 2009ம் ஆண்டுகளில் என இரண்டு முறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர். இதனால் கூடுதல் கவனத்துடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் ராகுல் காந்தியுடன் இணைந்து மன்மோகன் சிங் செய்தியாளர்களை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சந்தித்து உரையாடினார். அப்போது நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் கூறியிருந்தார்.