பூட்டிய கடைக்கு முன் பிரட் பாக்கெட்! கல்லாப் பெட்டியில் காசு போட்டு எடுத்துக்கலாம்! நெகிழ வைக்கும் ஓனர்..!

பணியாளர்களே இல்லாத ஒரு பேக்கரியில் மக்கள் ரொட்டி பாக்கெட்டை எடுத்துக்கொண்டு அதற்குண்டான பணத்தை அங்கே வைத்துச் செல்லும் ஆச்சரியமூட்டும் நிகழ்வு நடந்து வருகிறது.


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு கடந்த வாரத்தில் பிறப்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் உள்ள ரத்தினபுரி என்ற பகுதியில் விக்னேஷ் என்ற நபர் முத்து விலாஸ் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்ஸ் என்ற பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

இந்த கடையின் உரிமையாளர் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்கும் வகையில் ஒரு வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார். அதன்படி கடையின் முன்பு ரொட்டி பாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் கடையில் வேலை செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு ரொட்டி பாக்கெட்டின் விலை 30 ரூபாய் எனவும் மக்கள் ரொட்டி பாக்கெட்டை எடுத்துக்கொண்டு அதற்கு உண்டான பணத்தை அங்குள்ள பெட்டி ஒன்றில் வைத்து விட்டுச் செல்லலாம் எனவும் கடையின் உரிமையாளர் எழுதி ஒட்டியுள்ளார்.

அதேபோன்று அக்கடையில் மக்கள் ரொட்டியை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை அந்த பெட்டிக்குள் வைத்து சென்று விடுகிறார்கள். இம்முறையில் நாளொன்றுக்கு 100 முதல் 150 ரொட்டி பாக்கெட்டுகள் வரை விற்பனை ஆகின்றது . மேலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான ரொட்டி கிடைக்க செய்ய வேண்டும் என்று இந்த முறையை கையாண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடையில் பணியாட்கள் யாரும் இல்லாமல் மக்களே வந்து ரொட்டி பாக்கெட்டை எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வைத்து செல்வது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.