மத்திய அரசுப் பணிகளில் மாநில ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்! ராமதாஸ் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுப் பணிகள் வட இந்தியர்களால் சூறையாடப்படும் நிலையில், இந்த பணிகளில் மாநில ஒதுக்கீடு பெறவேண்டியது அவசியம் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள்; வட இந்தியர்களுக்கு விதிகளை மீறி முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் கூறி வருகிறது.

அதே கருத்தைத் தான் சென்னை உயர்நீதிமன்றமும் கூறியிருக்கிறது. இது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழகத்தின் நிலைப்பாடும் இது தான். தமிழக மக்களின் மனங்களில் இது குறித்த வினாக்கள் தான் எழுந்து கொண்டிருக்கின்றன.

தெற்கு தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வாக இருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறை பணியாளர் நியமனமாக இருந்தாலும் வட இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்படுகின்றனர். இது நிச்சயம் இயல்பாக நடைபெற்றதாக இருக்க முடியாது. அண்மையில் கூட அஞ்சல்துறை போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழியே தெரியாத ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழித் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விட அதிக மதிப்பெண் பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இப்படி ஒரு அதிசயம் நிகழ வாய்ப்பே இல்லை; மோசடி நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். 

அதைத் தான் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி, மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை பணிகளில் வட இந்தியர்களை அதிக எண்ணிக்கையில் திணிக்க வேண்டும் என்பதற்காகத் தான் திட்டமிட்டு முறைகேடுகள் நடக்கின்றன. உயர்நீதிமன்றத்தின் அறிவுரையால் இம்முறைகேடுகளை தடுக்க முடியாது; இவை தொடரவே செய்யும்.

எந்தவொரு சீர்திருத்தமும் சட்டப்பூர்வமாக செய்யப்பட்டால் தான் அது மதிக்கப்படும்; பின்பற்றப்படும். தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிற மாநிலத்தவர்கள் நியமிக்கப் படுவதால், மொழிப்பிரச்சினை காரணமாக, அவர்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு சரியாக சேவை வழங்க முடியவில்லை.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிப்பது மட்டும் தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தும் இதை உறுதிப்படுத்துகிறது. மொத்தத்தில் மத்திய அரசு பணிகளில் மாநில ஒதுக்கீடு வழங்குவது காலத்தின் கட்டாயமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.