13 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவர்! YouTube மூலம் உயிர் பெற்ற அதிசயம்!

13 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஒருவர் தனது உறவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். யூடியூப் சேனலின் மூலம் அவர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே யுத்தம் மூண்ட காலக்கட்டங்களில் எல்லைமீறலே பெரிய குற்றமாக கருதப்பட்டது. நிலப்பரப்பின் எல்லைக்கோடுகள் மட்டுமின்றி பெருங்கடல் எல்லைக்கோடுகளும் இரு நாடுகளின் நட்புறவை கெடுக்கின்றன. இந்தியா- இலங்கை நாடுகளிடையே கடலெல்லை மிகுந்த ஆபத்தாக உள்ளது. 1000-த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மனிதாபிமானமின்றி சுட்டுத்தள்ளப்படுகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சிமடம் என்னும் பகுதியை சேர்ந்தவர் பரதண். இவர் மீன் பிடிக்க சென்ற போது மாயமானதாக கருதி மீன்வளத்துறை சார்பில் காணாதோர் பட்டியலில் சேர்த்தனர். பிறகு அவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்துவிட்டதாக கருதி கடந்த 13 வருடங்களாக இவரது உறவினர்கள் நினைவு தினம் அனுசரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் கொழும்பு ரயில் நிலையத்தில் பிச்சைக்காரர்கள் அமர்ந்து பிச்சையெடுப்பது வழக்கம். பொதுமக்கள் தங்களுக்கு அசௌகரியமாக உள்ளதென்று நிறைய முறை புகாரளித்துள்ளனர். இந்நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்பு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த செய்தியினை யாழ்ப்பாணம் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை இராமேஸ்வரத்தில் ஆட்டோ ஓட்டி வரும் ராஜேஷ் என்பவர் பார்த்துள்ளார். அதில் 13 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கருதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் பரதன் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்,இதில் தனது உறவினரான பரதனும் இருப்பதாக தெரிவித்துள்ளார். பரதனை பத்திரமாக மீட்டுத்தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து அதிகாரிகள் பரதன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.