பஸ் ஸ்டாப்பில் கொரோனா நோயாளியின் சடலம்..! உடலெல்லாம் ரத்தம்..! ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனவர் அனாதைப் பிணம் ஆன கொடுமை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரின் சடலமானது பேருந்துநிலையத்தில் கிடந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவமானது குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தின் தலைநகர் அகமதாபாத். இந்நகரில் குன்வந்த் மக்வானா என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக 10- ஆம் தேதியன்று அறிகுறிகள் தெரிந்தன. உடனடியாக இவர் அப்பகுதியில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவானது 14-ஆம் தேதி வெளிவந்தது.

அந்த முடிவில் இவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. உடனடியாக இவர் தன்னுடைய மகனுக்கு, தனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக இமெயில் அனுப்பியுள்ளார். அவருடைய குடும்பத்தினர் இவருடைய உடல்நிலை பற்றி தெரிந்துகொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

ஆனால் மருத்துவர்களோ அவர்களே வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். நேற்று காலை குன்வந்த் மக்வானாவின் வீட்டிற்கு காவல்துறையினர் கால் செய்துள்ளனர். அதாவது வைரஸ் பாதிப்பு அதிகமானதால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும், மருத்துவமனை வளாகத்திலிருந்து பெற்றுக்கொள்ள கூறினர்.

அதற்கு மாறாக மருத்துவமனையில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த பேருந்து நிலையத்தில் எந்தவித அடிப்படை சுகாதாரமின்றி குன்வந்த் மக்வானாவின் உடல் வீசப்பட்டிருந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மீண்டும் அந்த மருத்துவமனையில் உடலை அனுமதித்தனர்.

குன்வந்த் மக்வானாவின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்றபோது அவருடைய உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இருந்தது. எவ்வாறு அவர் இறந்தார் என்று குடும்பத்தினரின் கேள்விக்கு மழுப்பலாக மருத்துவமனை நிர்வாகத்தினர் பதிலளித்துள்ளனர்.

14-ஆம் தேதி அன்றே அவருக்கு கொரோனா நோய் இல்லை என்று பரிசோதனை முடிவில் வெளியானதால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார், ஆதலால் அதன்பின்னர் அவர் எவ்வாறு இறந்தார் என்பது எங்களுக்கு தெரியாது என்றும் முறையற்ற பதில் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையையும் அந்த குடும்பத்தினரிடம் வழங்காமல் தட்டிக்கழித்து வந்துள்ளனர். அதன்பின்னர் உறவினர்களும் எந்தவித பராமரிப்பு முறையுமின்றி அவருடைய சடலத்திற்கு இறுதி சடங்கு செய்துள்ளனர். 

இந்த சம்பவமானது அகமதாபாத் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.