உடலில் 16 ஆப்பரேசன்! செயல் இழந்த சிறுநீரகம்! ஆனால் மனம் தளரா உறுதி! வெள்ள பாதிப்பில் நெகிழ வைத்த இளைஞன்!

கிட்னி இழக்கும் அபாயம் கொண்டஇளைஞர் ஒருவர் கேரளா வெள்ள நிவாரண பணியில் துரிதமாக செயல்பட்டு வரும் செய்தியானது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


சென்ற வாரத்திலிருந்து கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த இயற்கை பேரிடரால் பலதரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக உலகின் பல்வேறு இடங்களிலும் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 95-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2.26 லட்சம் பேர் பல்வேறு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் பேயட் என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஷ்யாம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் "பசுமை ஆர்மி" சமூக சேவை இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

ஷ்யாம்குமார் உளவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.  துரதிஷ்டவசமாக இவருக்கு குழந்தையிலிருந்து 16 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவருடைய கால் இயல்பான முறையில் அமைந்ததில்லை. இந்நிலையில் கேரளாவில் நேர்ந்துள்ள இயற்கை பேரிடர்காக இவர் உதவ முன்வந்துள்ளார். 

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது கேரள மாநிலத்தின் அமைச்சரான தாமஸ் ஐசக் சந்தித்துள்ளார். இவருக்கு மொத்தம் மூன்று கிட்னிகள் உள்ளன. வலது புறத்தில் 2 கிட்னிகள் ஒன்றின் மேல் ஒன்று அமைந்துள்ளது. மேலும் இவருடைய சிறுநீர்ப்பை மூன்று வயது சிறுவனின் அளவிற்கே உள்ளது. இதனால் விரைவில் சிறுநீர் நிரம்பி வெளியேறும் நிலைமையால் அவதிப்பட்டு உள்ளார். 

இதனால் தன்னுடன் எப்போதுமே செயற்கை சிறுநீர்பை எடுத்து செல்லும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளார். இவருடைய கிட்னி 23 சதவீதம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அது 20 ஆக குறையும் பட்சத்தில் அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 

இத்தனை சிரமங்களையும் பாராமல் நிவாரணப் பணிகளில் அயராது ஈடுபட்டு வருகிறார். நள்ளிரவு 2 அல்லது 3 மணி வரை வேலை செய்யும் ஷியாம்குமார், தன்னுடைய செயற்கை சிறுநீர் பையை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் மறுநாள் காலை 10 மணிக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடுகிறார்.

இவருடைய அயராத உழைப்பை கண்டு பலரும் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.