தீராத சளி, தொடர் இருமல்! சாலையில் தவித்த முதிவரை உயிரோடு பிணவறையில் வீசிச்சென்ற பொதுமக்கள்! பிறகு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

சளி மற்றும் இருமலுடன் அவதிப்பட்டு வந்த முதியவரை மனிதாபிமானம் இல்லாமல் மக்கள் பிணவறை அருகே வீசி சென்ற சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரான பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் முகமது. இவருடைய வயது 60. இவர் டெய்லராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஊரடங்கிற்கு முன்பாக மதுரைக்கு சென்றுள்ளார். ஊரடங்கு திடீரென்று அமல்படுத்தப்பட்டால் அவரால் மீண்டும் சென்னைக்கு வர இயலவில்லை.

மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் தங்கியிருந்தார். சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு திடீரென்று காலில் புண் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தன்னிடம் பணமில்லாத காரணத்தினால் அவரால் மருத்துவமனைக்கு செல்லவில்லை. 

நீண்ட நேரம் அலைந்த களைப்பில் சாலையோரத்தில் படுத்து கிடந்தார். மேலும் அவருக்கு சளி மற்றும் இருமல் ஆகியன ஏற்பட்டுள்ளன. 3 நாட்களாக சாலையோரத்திலேயே அமர்ந்த இவரை பார்த்த அப்பகுதி மக்கள் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சத்தில் அப்பகுதி அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு அருகில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இவர் சிரமப்பட்டு வரும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன. இந்த காட்சிகளை பார்த்த மாவட்ட ஆட்சியர் அந்த முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அப்பகுதி செஞ்சிலுவை சங்கத்தினரிடம் முறையிட்டார்.

அதன்படி அப்பகுதி செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்தனர். சளி, இருமல், காய்ச்சல் ஆகியன இருப்பதால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த தகவல் மாவட்ட ஆட்சியரை சென்றடைந்ததும், உதவி செய்த செஞ்சிலுவை சங்கத்தின் நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.