15கிமீட்டருக்கு ரத்தக் கறை! சடலத்தை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற பயங்கரம்! குலை நடுங்க வைக்கும் கொடூரம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் ஹாபூர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டி என்னும் இடத்தில் முகுல் என்ற இளைஞர் வசித்து வந்தார். இவர் மீரட் பகுதியில் உள்ள தன்னுடைய நண்பரிடம் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தை கடனாக வாங்கியிருந்தார்.

நேற்று முகுலை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த முகுலின் உடலை மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்துக்கட்டி 15 கிலோமீட்டருக்கு ஓட்டி சென்றுள்ளனர்.

கார்கோடா என்ற இடத்திற்கு சென்றவுடன் முகுலின் உடலை சாலையோரத்தில் வீசிவிட்டு, இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு மர்ம நபர்கள் தப்பித்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் முகுலின் சடலத்தை கண்டு காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இடது கால் இல்லாமல், வலது கால் கடுமையாக சேதமடைந்து பலத்த காயங்களுடன் முகுல் சடலமாக கிடந்தார்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் முகுலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவருடைய பெற்றோரிடம் விசாரித்து பார்த்த போது, "முகுல் மிகவும் அமைதியானவர். அவர் யாருடனும் தேவையற்ற விவாதங்களுக்கு செல்ல மாட்டார்" என்று கூறியுள்ளனர்.

வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.