குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி! கோபத்தில் கணவனால் மாமியாருக்கு நேர்ந்த விபரீதம்!

மாமியாரின் கழுத்தை நெரித்து மருமகன் கொலை செய்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் சங்ககிரி எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகேயுள்ள பாப்பான்காடு என்னும் இடத்தை சேர்ந்தவர் பேபி. இவருடைய மகளின் பெயர் தீபா. தீபாவுக்கு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கணபதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 

இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சமீப காலத்தில் கணவன் மனைவியிடையே பலத்த சண்டைகள் ஏற்பட்டு வந்தன.  இதனால் இருவரும் பிரிந்தனர். தீபா தன்னுடைய தாயாரின் வீட்டில்  தங்கி வந்தார். அப்பகுதியிலுள்ள நூற்பாலையில் தீபா வேலை பார்த்து வந்தார்.

தன்னுடன் சேர்ந்து வாழுமாறு பலமுறை கணபதி தீபாவிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் அப்போதெல்லாம் தீபாவின் தாயார் அவரை அனுப்பாமல் தன்னுடனே வைத்திருந்தார். இதனால் கடுமையாக ஆத்திரமடைந்த கணபதி கிடைக்கும் நேரத்தில் மாமியாரை கொலை செய்யவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தார்.

அதன்படி நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேபி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த கணபதி பேபி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பேபி இறந்தவுடன் கணபதி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 

சம்பவம் அறிந்து பேபியின் வீட்டிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலைமறைவாகியுள்ள கணபதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.