ஒரு கொலையை மறைக்க 9 பேர் கொலை..! கிணற்றில் இருந்து ஒரே நாளில் 9 சடலங்கள் மீட்பு வழக்கில் நெஞ்சை உறைய வைக்கும் வாக்குமூலம்!

தெலுங்கானாவில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு கொலையை மறைப்பதற்காக 9 பேரை கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோரிகுண்டா கிராமத்தில் சனல் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் மிகப் பெரிய கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணற்றிலிருந்து நேற்றைய தினம் ஒன்பது பேரது சடலங்கள் மீட்கப் பட்டது அங்கு இருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பற்றி அறிந்த தெலுங்கானா காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணையும் நடைபெற்று வந்தது.

விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மசூத் மற்றும் நிஷா தம்பதியினர் மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். ஆனால் இவர்கள் குடும்பத்தினருடன் கடந்த இருபது ஆண்டு காலமாக தெலுங்கானாவில் வசித்து வருகின்றனர். மேலும் வாரங்கல் கீர்த்தி நகரில் அமைந்திருக்கும் சனல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். இந்த குடும்பத்தினர் வசித்து வந்த அதே பகுதியில் பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவரும் வசித்து வந்துள்ளார். சஞ்சய்குமாருக்கும் நிஷா குடும்பத்தினருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நிஷாவின் அக்கா மகள் ரபிகா மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி தன்னுடைய 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் தெலுங்கானாவில் உள்ள நிஷா மற்றும் மசூத் ஆகியோரின் வீட்டிற்கு வந்து இருக்கிறார். இதனை தொடர்ந்து ரபிகா அந்த இடத்தில் கிடைத்த கூலி வேலைகளை பார்த்து தன்னுடைய குழந்தைகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில் ரபிகா, சஞ்சய் குமாருக்கு உணவு சமைத்து தரும் வேலையை பார்த்து வந்திருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் ரபிகா சஞ்சய் குமாருடன் இணைந்து திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். மேலும் அவர்களுடன் மகள் மற்றும் மகன்கள் ஆகியோரும் வசித்து வந்துள்ளனர். சஞ்சய் குமாருக்கு ரபிகாவின் மூத்த மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அந்த சிறுமியை தன்வசப்படுத்த முயற்சித்திருக்கிறார் சஞ்சய்குமார். இதனைப் பற்றி அறிந்த ரபிகா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன் மகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறாயே என்று கூறி சஞ்சயை கண்டித்திருக்கிறார். ஆனால் எதைப்பற்றியும் காதில் வாங்காத சஞ்சய் தன் போக்கில் இருந்து வந்திருக்கிறார். 

ரபிகாவின் மூத்த மகளை அடைய நினைத்த சஞ்சய், அதற்கு இடையூறாக இருந்த ரபிகாவை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். ரபிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரயிலில் அழைத்து சென்றிருக்கிறார். அப்பொழுது ரபிகாவிற்கு சஞ்சய் மோரில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்திருக்கிறார். ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. தூக்க மயக்கத்தில் இருந்த ரபிகாவை வேகமாக ரயிலில் இருந்து வெளியே தள்ளி கொலை செய்திருக்கிறார் சஞ்சய். இதனைத்தொடர்ந்து ரயில் நின்ற அடுத்த நடை பாதையில் இறங்கி ஒன்றும் தெரியாதமாதிரி வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்.

வீடு திரும்பிய அவரிடம் மசூதின் மனைவி நிஷா ரபீகாவை பற்றி கேட்டிருக்கிறார். அப்போது அவர் ரபீகா அவருடைய சொந்த ஊருக்கு சென்று உள்ளதாக கூறி இருக்கிறார். சஞ்சையின் பேச்சில் பொய்யிருக்கிறது என்பதை அறிந்த நிஷா தொடர்ந்து அவரை கேள்வி எழுப்பி இருக்கிறார். உண்மையை கூற வில்லை என்றால் போலீஸிடம் செல்வேன் என்று கூறி மிரட்டி இருக்கிறார். பின்னர் கடந்த மே மாதம் இருபதாம் தேதி, மசூத் மற்றும் நிஷாவின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. 

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிஷாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட 9 பேர் பங்கேற்றுள்ளனர். இதுபற்றி அறிந்த சஞ்சய், ரபிகாவின் கொலையை பற்றி மறைப்பதற்காக நிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார். ஆகையால் நிஷாவின் வீட்டிற்குள் தூக்க மாத்திரைகளோடு சென்றிருக்கிறார். அதில் பங்கேற்ற சஞ்சய் நீண்ட நேரமாக அங்கே இருந்துள்ளார். அப்போது அவர்கள் குடிக்கும் குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளை கலந்து இருக்கிறார்.

இதனால் அனைவரும் தூக்க மயக்கத்தில் இருந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த சஞ்சய் ஒவ்வொருவரையாக குழந்தைகள் உட்பட அனைவரையுமே அருகில் இருந்த கிணற்றில் கொண்டுபோய் வீசியுள்ளார். அவர்கள் கிணற்றில் இருந்த தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்ததை உறுதி செய்த பின்பு அந்த இடத்தை விட்டுச் சென்றிருக்கிறான் சஞ்சய். இந்த சம்பவம் நடைபெறும் பொழுது அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை வைத்துதான் போலீசார் சஞ்சய் தான் இந்த கொலையை செய்து இருக்கிறான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

 மேலும் சிறுமி மீது இருந்த ஆசையால் ரபிகாவை கொலை செய்துவிட்டு அதனை மறைப்பதற்காக தான் 9 பேரையும் சஞ்சய் கொலை செய்திருக்கிறான் என்று தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் சஞ்சயை கைது செய்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரவீந்திரன் கூறுகையில், கொலைக் குற்றவாளியான சஞ்சய்க்கு அதிகபட்ச தண்டனையை நிச்சயம் நாங்கள் பெற்றுத் தருவோம் என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.