பரபரப்பான சாலை! மேம்பாலத்தில் இருந்து குதித்த இளைஞன்! அதிர்ச்சியில் உறைந்த திருப்பூர்!

மேம்பாலத்தின் மேலிருந்து கீழே குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 30. தொடக்கத்தில் ஓட்டுனராக பணியாற்றிய இவர் சில காலம் கழித்து மனநலம் பாதிக்கப்பட்டார்.  

திருப்பூர் பேருந்து நிலையத்தில் முன்புறத்தில் மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் சரத்குமார் இந்த மேம்பாலத்தின் மேல் நடந்து கொண்டிருந்தார். திடீரென்று அவர் கைப்பிடியின் மேல் ஏறி நின்று கம்பியை பிடித்துக்கொண்டு கீழே குதிப்பதற்கு தயாராக இருந்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் அவரை குதிக்க வேண்டாம் என்று கீழே இருந்து கத்தினர். ஆனால் சரத்குமார் பல்லடம் நோக்கி வந்த பேருந்தின் மீது குதித்தார். அவர் குதிப்பதை கண்ட பேருந்து ஓட்டுநர் சட்டென்று பஸ்சை நிறுத்தினார்.

அந்த வாலிபர் பஸ்ஸின் மேற்கூரையில் விழுந்தார். பின்னர் மேற்கூரையில் இருந்து சரிந்து கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து  அவரை மீட்டனர். பின்னர் அவரை தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல்த்துறையினர் அவருடைய உறவினர்களுக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்து அவர்களை வரவழைத்தனர். பின்னர் சரத்குமாரை பத்திரமாக ஒப்படைத்தனர். இவர் கீழே விழுந்த  வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.