முஸ்லீமாக மாறி ஒரு கல்யாணம்..! கிறிஸ்டியனாக மாறி மறு கல்யாணம்..! நாகர்கோவில் சாஃப்ட்வேர் என்ஜினியர் சாப்பிட்ட ரெண்டு லட்டு!

மனைவியை ஏமாற்றிவிட்டு மதம் மாறி 2-வது திருமணம் செய்துகொண்ட கணவரை காவல்துறையினர் கைது செய்திருப்பது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் செண்பகராமன்மதுரை என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு தங்க பொன்சன் என்பவர் பிறந்து வளர்ந்தார். தற்போது அவர் மும்பை மாநகரிலுள்ள ஒரு நிறுவனத்தில் சாஃப்ட்வேர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய வயது 36.

மும்பையில் ஃபாத்திமா என்ற 39 வயதுப் பெண் வசித்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவர் ஒரு விபத்தில் உயிரிழந்தார். 2010-ஆம் ஆண்டு பொன்சன் மற்றும் பாத்திமா நெருங்கி பழக தொடங்கியுள்ளனர். அந்த ஆண்டின் இறுதியிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பாத்திமாவை திருமணம் செய்வதற்காக பொன்சன், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளன. 2016-ஆம் ஆண்டில் பொன்சன் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இங்கு அவருடைய தாயான தமிழ்செல்வி என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே பாத்திமாவை வரதட்சனை கேட்டு பொன்சன் கொடுமைப்படுத்தியுள்ளார். நாகர்கோவிலில் வேலை பார்த்துவந்த பொன்சன், தனக்கு வெளியூரில் வேலை கிடைத்து இருப்பதாக கூறி, குடும்பத்தினரை மும்பைக்கு அனுப்பி வைத்தார். 

அதே பகுதியை சேர்ந்த ஷகிலா என்ற பெண்ணை அவர் 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்காக அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். மேலும் திருமண புகைப்படங்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டார்.

இதனை பார்த்த பாத்திமா திடுக்கிட்டார். உடனடியாக கணவரின் சொந்த ஊருக்கு வந்து அவரிடம் முறையிட்டார். தன்னுடைய தாயை கவனித்து கொள்வதற்காக 2-வது திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே தமிழ்செல்வி ஷகிலா உடன் இணைந்து பாத்திமாவை கடுமையாக தாக்கியுள்ளார்.

தனக்கு நேர்ந்த இன்னல்களை கூறி பாத்திமா நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வி, பொன்சன், ஷகிலா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.