இளம்பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்த வழக்கில் புதிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக மும்பை மாநகர காவல் துறையினர் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பூட்டிய அறையில் சடலமாக கிடந்த இளம் பெண்..! குற்றவாளியை காட்டிக் கொடுத்த ஒரே ஒரு மது பாட்டில்! சினிமாவை மிஞ்சும் சஸ்பென்ஸ்!
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதியன்று ரோசினா என்ற 33 வயது இளம்பெண் தன்னுடைய அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அறை சம்பந்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பதிவுகளில் சந்தேகிக்கும்படி இருந்த நபர் ஒருவரை காவல்துறையினர் விசாரித்தனர்.
விசாரணையில் போதிய தகவல்கள் கிடைக்காத காரணத்தினால் அந்த நபரை காவல்துறையினர் விடுவித்தனர். ரோசினாவின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவர் கொலை செய்யப்பட்டதற்கு எந்த ஒரு அடிப்படை குறிப்பும் இடம்பெறவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் ரோசினாவின் அறையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு மது பாட்டில் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அந்த மதுபாட்டில் விநியோகம் செய்யப்பட்ட கடைக்கு சென்று காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரித்து அந்த மர்மநபர் மதுபானம் வாங்கி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர் விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
சம்பந்தப்பட்ட நபர் கொல்கத்தாவை சேர்ந்த நகை வியாபாரியான ஸ்வாபன்தாஸ் என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு ரோசினாவுடன் ஒரு மது விடுதியில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. இவரிடமிருந்து ரோசினா நிறைய பணம் பெற்றுள்ளார். ஆனால் சமீபத்தில் ஸ்வாபன்தாஸ் பணம் சரியாக தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ரோசினா, தகாத உறவை ஸ்வாபன்தாஸின் மனைவியிடம் வெளிப்படுத்திவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்வாபன்தாஸ் சம்பவத்தன்று ரோசினாவின் அறைக்கு சென்று தலையணையை வைத்து மூச்சடைத்து அவரை கொலை செய்துள்ளார்.
வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட காவல்துறையினர் ஸ்வாபன்தாஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.