காத்தாடும் மக்கள் நீதி மையம்! விருப்பமனு வாங்க செட்டப் ஆட்கள்! பரிதாபத்தில் கமல்!

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் தனியே தேர்தலை எதிர்கொள்ளும் என்று அறிவித்து, அதற்கு விருப்பமனு விநியோகத்தை இன்று தொடங்குவதாக அறிவித்தார் கமல். ஆனால், அங்கு நடந்ததுதான் பரிதாபம்.


ரஜினிகாந்த் தேர்தலுக்கு வரமாட்டார் என்பதுடன், தன்னுடைய கட்சிக்கு ரஜினி ஆதரவு தருவார் என்ற நம்பிக்கையில்தான் கமல்ஹாசன் கட்சி தொடங்கினார். ஆனால், அது பொய்த்துப்போனது. அதனால் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்துவிட ஆசைப்பட்டார். ஆனால், அதுவும் கானல் நீராகிவிட்டது.

தி.மு.க., அ.தி.மு..க. ஆகிய கட்சிகள் எதுவும் சேர்த்துக்கொள்ளாத நிலையில் தினகரன் மட்டுமே ஆதரவளித்தார். ஆனால், இருப்பதிலேயே பெரிய ஊழல் கட்சி என்பதால் தினகரனுடன் சேர்ந்துகொள்ள விரும்பாமல் தவித்தார். எதுவுமே இல்லாத நிலையில் விஜயகாந்தை பிடிக்க ஆசைப்பட்டார்.

அதற்காக கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ.வும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷும் பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள். எவ்வளவு பணம் குடுப்பீங்க என்று சுதீஷ் கேட்டதும் தலைதெறிக்க ஓடிவந்துவிட்டார் கமல்ஹாசனின் நபர். ஆக, வேறு வழியே இல்லாமல் தனியே தேர்தலை சந்திக்கத் தயாரானார் கமல்ஹாசன்.

பிப்ரவரி 28ம் தேதி விருப்பமனு ஒரே நேரத்தில் சென்னையிலும் பொள்ளாச்சியிலும் விநியோகம் தொடங்கும் என்றும், 10 ஆயிரம் ரூபாய் என்றும், அதனை கமல்ஹாசனே தொடங்கிவைத்து செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. 

அதன்படி அதிகாலையில் ஏராளமான பத்திரிகையாளர்கள் மட்டும் சென்னை தலைமையகத்தில் குவிந்து நின்றார்கள். ஆனால், விருப்பமனு வாங்குவதற்கு யாருமே வரவில்லை என்றதும் அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்து நின்றனர். அந்த இடமே காத்தாடியதைக் கண்ட நிர்வாகிகளுடனே கமல்ஹாசனுக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதனால் செய்தியாளர் சந்திப்பு உடனடியாக இல்லை என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு நிர்வாகிகள் தரப்பில் சில செட்டப் நபர்கள் உடனடியாக மனு வாங்குவதற்காக அனுப்பப்பட்டனர். அப்படியும் 15 நபர்களுக்கு மேல் அவர்களால் கூட்டம் சேர்க்க முடியவில்லை.

ஏன் இத்தனை குறைந்த ஆட்கள் மட்டுமே விருப்பமனு கொடுத்திருக்கிறார்கள் என்று கமல் மன்றத்தின் நிர்வாகியிடம் கேட்டபோது, ‘இன்னைக்கு நல்ல நாள் இல்லை. அதனால தள்ளிப்போகுது. அப்புறம் 7ம் தேதி வரைக்கும் டயம் இருக்குது. மாசம் பிறந்ததும் பணப்புழக்கம் வரும், நிறைய பேர் வருவாங்க’ என்று கள்ளம் கபடம் இல்லாமல் பதில் அளித்தனர்.

என்னத்தை சொல்ல, பரிதாபம்தான்.