YouTube பார்த்து டாக்டர் மகளை கடத்திய கள்ளக் காதல் ஜோடி! சினிமா ஆசையில் செய்த விபரீத முயற்சி!

சென்னையில் சிறுமியை வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் ஒருவர் கடத்தி சென்று பெற்றோரிடம் 60 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ள சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையின் அமைந்தகரை பகுதிக்கு அருகே செனாய் நகர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நந்தினி என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு அன்விகா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை தற்போது தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறது. 

ஒரு மாதத்திற்கு முன்னர் அம்பிகா என்ற பெண் இவர்கள் வீட்டில் பணிப்பெண்ணாக சேர்ந்தார். நேற்று மதியம் பள்ளியில் இருந்து குழந்தையை அழைத்து வந்த அம்பிகா அவளுடன் விளையாடி கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து குழந்தையை தேடிய நந்தினி அம்பிகா மற்றும் குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அவர் தேடியும் இருவரையும் கண்டுபிடிக்க இயலவில்லை.

சில மணி நேரம் கழித்து அம்பிகாவின் மொபைலிலிருந்து நந்தினிக்கு போன் வந்துள்ளது. அதில் அம்பிகா தன்னையும் குழந்தையையும் மர்ம நபர்கள் கடத்தி உள்ளதாகக் கூறி போனை கட் செய்து உள்ளார். 

இதற்கிடையே அமைந்தகரை காவல் நிலையத்தில் அருள்ராஜ் புகார் அளித்தார். அம்பிகாவின் மொபைல் போனை ட்ரேஸ் செய்த காவல்துறையினர், அவருடைய மொபைலுக்கு அடிக்கடி ஒரு நம்பரில் இருந்து கால் வந்ததுள்ளதை கண்டறிந்தனர். அதனை ஆராய்ந்த போது கரீமுல்லா சையத் என்பவரை காவலர்கள் கண்டறிந்தனர்.

கரீமுல்லா புழல் பகுதியில் உள்ள கேஎஃப்சி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அம்பிகாவை தன்னுடைய காதலி என்று கூறியுள்ளார்.

தங்கள் பாணியில் காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்தனர். தாங்கிக்கொள்ள இயலாத கரீமுல்லா இருவரும் இணைந்து குழந்தையை கடத்தி நாடகமாடியதை ஒப்புக்கொண்டார். மேலும் அம்பிகா போது தனியார் விடுதியில் தங்கி உள்ளதாக கூறினார். 

கரீமுல்லா கூறிய விடுதிக்கு சென்று அம்பிகாவை கைது செய்தனர். புகார் அளித்த 10 மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டெடுத்த காவல்துறையினருக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவமானது அண்ணாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.