முன்னோர்களின் ஆசிர்வாதம் வேண்டுமா? மகாளயபட்சத்தில் இதை மட்டும் செய்யுங்க போதும்!

மாதம் மாதம் அமாவாசை வருகிறது. ஆனால் நம் முன்னோர்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசையை மட்டும் சிறப்பாக வழிபட்டு வந்துள்ளனர்.


இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது மிகவும் விஷேசமானதாகும். மகாளய பட்சம் எப்போதும், பௌர்ணமி முடிந்த மறுநாள் ஆரம்பமாகி (அதாவது இன்று) அதற்கு அடுத்து வரும் அமாவாசை வரையிலான இரு வார காலம் இருக்கும். அந்த வகையில் பௌர்ணமி முடிந்த நிலையில் நேற்று (15.9.2019) மகாளய பட்சம் ஆரம்பமானது. 

மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் வரும் பரணி, மஹhபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தானங்களைச் செய்வதால் 12 மாதங்களிலும் தானம் செய்த பலன் கிடைக்கும். 

பல தெய்வீக நு}ல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். 

இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். 

இந்த காலத்தில் திருமணம் போன்ற எந்த சுபகாரியத்தையும் செய்யமாட்டார்கள். ஏனென்றால் இந்த காலப்பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது. சிரார்த்தம், திதி கொடுப்பது, தான, தர்மங்கள் செய்வது, பங்காளிகளுக்கு இடையிலான பிரச்சனைகளைத் தீர்ப்பது, அதாவது சொத்து உள்ளிட்ட பிரச்சனைகளில் உள்ள வில்லங்கங்களைத் தீர்த்துக் கொள்கிற காலம்தான் இந்த மகாளய பட்சம் என்பதாகும். 

இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். 

முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு புல், பழம் கொடுக்கலாம். எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோர்களின் பெயர்களை உச்சரித்து, 'காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும், தண்ணீரும் விட்டுக்கூட திதி பூஜையை செய்யலாம்.