மகாகவி பாரதியாரும், இந்திய சுதந்திர போராட்டமும்-ஒரு பார்வை!

சுப்ரமணிய பாரதியார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் டிசம்பர் மாதம் 11ம் தேதி, 1882ம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார்.


தமிழ் மொழியின் மீது பாரதி கொண்ட காதல் சொல்லில் அடங்காது .அதனால்தான் அவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் " என்று கூறியுள்ளார் .

தன்னுடைய சிறுவயதில் இருந்தே கவிபாடும் ஆற்றலைக் கொண்ட பாரதி தன்னுடைய 11வது வயதிலேயே கவிதை படைப்புகளை படைக்க ஆரம்பித்துவிட்டார். இவருக்கு மீசை கவிஞன் முண்டாசு கவிஞன் சிறப்பு பெயர்களும் உண்டு. 

கடந்த 1896ம் ஆண்டு செல்லம்மாள் என்ற கன்னிகைக்கும் சுப்ரமணிய பாரதியாருக்கும் திருமணம் நடைபெற்றது . 

பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் , வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார். 

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டவராய் திகழ்ந்தார். பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். 

இதுமட்டுமில்லாமல் பாரதியார் விடுதலை போராட்டத்தின் போது அனல் பறக்கும் பல கவிதைகளை எழுதி மக்கள் மனதில் விடுதலை உணர்வை தூண்டினார். மேலும் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். பாரதியார் கண்ணன் பாட்டு ,குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என பல நூல்களை எழுதியுள்ளார்.

அவரது நூல்கள் அனைத்தும் மக்கள் மனதில்  சுதந்திரப்போராட்ட கிளர்ச்சியை ஏற்படுத்தியது.  பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான மாபெரும் புரட்சியாக இது அமைந்தது .

கடந்த 1921ம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி  கோவிலில் உள்ள யானையால் தாக்கப்பட்டார். இதற்குப் பின் படுத்த படுக்கையாய் சில காலம் தன் வாழ்க்கையை ஓட்டினார் பாரதி. 

1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி தனது 39வது வயதில் இவ்வுலக வாழ்வில் இருந்து விடைபெற்றார்.

அவர் இந்த மண்ணை  விட்டு விலகினாலும் அவரது படைப்புகள் என்றும் நமது  நெஞ்சை விட்டு நீங்காது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .