எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டது எல்லோருக்கும் தெரியும்! என்.எஸ்.கிருஷ்ணனை சுடுவதற்கு துப்பாக்கியோடு திரிந்தது தெரியுமா? கலகக்கார கலைஞனை நினைவு கொள்வோம்.

எம்.ஆர் ராதாவின் நாடக வசனங்கள் ஒவ்வொன்றும் ஒரு வெடிகுண்டுதான்.திருவண்ணாமலைல தீபம் எரிஞ்சா கன்னத்துல போட்டுக்கறியே ,வீட்டுல தீப்பிடிச்சா ஏண்டா வயித்துல அடிச்சுக்கறே,உழுந்து கும்புடு அக்னி பகவான என்பதுபோல எத்தனையோ முறை மக்களுக்கு அதிர்ச்சி அளித்தவர்.


அவர் பிறந்தது சென்னைச் சூளையில்.எட்டு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி நாடகக் கம்பெனியில் சேர்ந்து விட்டார்.மெட்ராஸ் ராஜகோபால் ராதாகிருஷ்ணன் என்பதுதான் எம்.ஆர்.ராதா.

ராதா ஆரம்பகாலத்தில் நாடகக் கம்பெனி துவங்கிய போது அவருக்கு பொது உடமைக் கொள்கையில் பிடிப்பிருந்திருக்கிறது.அதனால் தனது நாடகத்திரையில் உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் என்று எழுதி வைத்திருந்தார்.அந்தக்காலத்தில் அவருக்குப் பெரியாரைத் தெரியாது.

நாடக நடிகர்கள் பலரும் பச்சை வண்ண மேலட்டை கொண்ட குடியரசு இதழ்களை மறைத்து வைத்துப் படிப்பதைப் பார்த்த எம்.ஆர்.ராதா எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை என்கிற நடிகரிடம் பெரியார்ங்கறது யார் என்று கேட்டாராம் அதற்கு எதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை, அவர் ராவணன் மாதிரி ஒரு ராட்சஷன்,என்று சொல்லி எம்.ஆர்.ராதாவை அழைத்துப்போய் பெரியாரிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

அந்த சந்திப்பு ராதாவுக்குள் இயல்பாக இருந்த போர்குணத்தை ஒரு முகப்படுத்திவிட்டது.அவரது நாடகத்திரையில் இப்போது ' திராவிட பாட்டாளிகளே ஒன்று படுங்கள்' என்கிற வாசகம் இடம் பிடித்தது.நாடகமேடைகளில் அவரளவுக்கு எதிர்ப்பையோ,பாராட்டுகளையோ சந்தித்தவர் எவருமில்லை.

அண்ணா எம்.ஆர்.ராதாவின் நாடகத்தைப் பார்த்துவிட்டு அதே மேடையில் தந்தை பெரியாருடன் ஏறி நாங்கள் நூறு மாநாடு போடுவதை விட மக்களுக்கு அதிக விழிப்புணர்வைத் தரக்கூடியது ராதாவின் ஒரே ஒரு நாடகம் என்று பாராட்டி இருக்கிறார். 1937லேயே ராஜ சேகரன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தி டக்ளஸ் ஃபேர் பேங்ஸ் போல கத்திச்சண்டை எல்லாம் செய்திருக்கிறார்.

ஆனால்,அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவில்லை.அது நாடக நடிகர்கள் எல்லாம் குறைந்த உழைப்புக்கே அதிக ஊதியம் தரும் சினிமாவுக்குள் நுழைய வழி பார்த்துக்கொண்டு இருந்த காலம்,ராதா சினிமாவை விட்டு விட்டு நாடகத்துக்கே திரும்பிவிட்டார்.அதற்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து ரத்தக்கண்ணீர் மூலம் மறுபடி சினிமாவில் நுழைந்தார்.

128 படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவை அவர் கடைசி வரை மதித்ததே இல்லை.'படம் நூறுநாள் ஓடு நல்ல கலக்‌ஷன் ஆனாத்தான விழா எடுக்கிறான்.ஹீரோ நல்லா நடிச்சிருக்கான்னு எவனாவது விழா எடுக்கறானா' என்று கேட்டிருக்கிறார். 1966 ல் தமிழக அரசு அவரை சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுத்தது.

ஆனா,தமிழ் தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க முடியாது.அவர்கையால தர்ற அவார்டு எனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.சினிமாங்கறது ரிட்டையர்ட் லைஃப் என்பாராம்.எம்ஜிஆரை மட்டுமல்ல என்.எஸ் கிருஷ்ணனையு சுட்டு விடுவதாகத் துப்பாக்கியோடு சுற்றி இருக்கிறார் எம்.ஆர்.ராதா.அவ்

ர் நடித்த ஜெகதீசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற இழந்தகாதல் என்கிற நாடகத்தை சினிமாவாக்க முடிவு செய்த என்.எஸ்.கே ராதா நடித்த ஜெகதீசன் வேடத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தது கே.பி காமாட்சி என்கிற நடிகரை.அதனால்தான் துப்பாக்கியை தூக்கி இருக்கிறார் ராதா.

நேரில் சந்தித்தபோது ' உன்னை வச்சு நான் வேலை வாங்க முடியுமா,காமாட்சினா சொன்னதை செய்வான்' என்று என்.எஸ்.கே சொன்னதும் சமாதனமாகி விட்டாராம் ராதா .பொதுவாக பார்ப்பனர்களை தன் நாடகத்தில் கேலி செய்தாலும் ,அவர் உட்பட பல நல்ல நடிகர்களை உருவாக்கிய ஜெகநாத ஐய்யர் என்பவர் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.ஒரு நடிகனைக் கூட உருவாக்காத சங்கரதாச சாமிகளை நாடகத்தந்தை என்று சொல்லுவதை விட ஜெகன்நாத அய்யரை அப்படி அழைப்பதுதான் சரி என்று சொல்லி இருக்கிறார்.

அவருடைய நாடகத்தில் ராமாயனாக நடிக்கும் ராதா குடிப்பார்.இறைச்சி உண்பார்.இதை எதிர்த்து வழக்குகள் வந்தபோது , நாடக நோட்டீசில் ' உள்ளே வராதே' என்று அச்சிட்டு அதன் கீழ் நாடகத்தில் இந்துக்களின் மனதை புண்படுத்தும் காட்சிகள் இருக்கின்றன.

அதனால் வராதே ,அதை மீறி உள்ளே வந்து உன் மனம் புண்பட்டால் நான் ஜவாப்தாரி அல்ல என்று அச்சிட்டு வெளியிட்டாராம்.இப்படிப் பொதுவாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரேபோல கலகக்காரனாவே வாழ்ந்த எம்.ஆர்.ராதாவின் நாற்பதாவது நினைவு தினம் இன்று.