பெரம்பலூர் அரசு பள்ளிகளுக்கு அடித்தது ஜாக்பாட்!! எம்பி பாரிவேந்தர் அறிவித்த அதிரடி திட்டம்!!

பெரம்பலூரில் உள்ள 100 சிறந்த அரசு பள்ளிகளுக்கு சொந்த செலவில் இலவச மடிக்கணினிகளை வழங்குவேன் என அத்தொகுதி எம்பி பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.


2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்ஆர்எம் கல்லூரியின் நிறுவனர் பாரிவேந்தர், அத்தொகுதியில் நல்ல செல்வாக்கில் இருந்த சிவபதியை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மகத்தான வெற்றியை பதிவு செய்தார்.

முதலில் பாஜகவிலிருந்த பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அதற்கு பாஜக சற்றும் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் ஸ்டாலினை நேரில் சந்தித்து பெரம்பலூர் தொகுதி தனக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். அதன்படி பெரம்பலூர் தொகுதி பாரிவேந்தருக்கு ஒதுக்கப்பட்டது. அதனால் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

தற்போது பாரிவேந்தர் தனது தொகுதியில் உள்ள ஒரு சிறந்த 100 அரசு பள்ளிகளுக்கு சொந்த செலவில் இலவச மடிக்கணினிகளை வழங்குவதாக அதிரடி திட்டமொன்றை வைத்துள்ளார். இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேபோன்று பல நலத்திட்டங்களை கிராமங்களுக்கு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெரம்பலூர், துறையூர் பகுதியில் ரயில் சேவையை கொண்டு வரவும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வருவதாக பாரிவேந்தர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.