தினகரன் கட்சியில் 2வது விக்கெட் அவுட்! பழனியப்பனையும் தூக்கியது தி.மு.க!

டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜியை தி.மு.க தன்வசப்படுத்தியுள்ள நிலையில், பழனியப்பனும் தி.மு.க பக்கம் சாய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரன் தோல்வி அடைந்ததது, இரட்டை இலை வழக்கில் தினகரன் விசாரணையை எதிர்கொண்டிருப்பது, மேலும் முன்பை போல் ஆக்டிவ் பாலிடிக்சில் இல்லாமல் பம்முவது போன்ற காரணங்களால் அ.ம.மு.கவில் கடந்த ஒரு மாதமாகவே புகைச்சல் இருந்து கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் தினகரனின் வலது கரமாக செயல்பட்டு வந்த செந்தில் பாலாஜியுடன் தி.மு.க டீல் பேசி முடித்துள்ளது.   விரைவில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் தி.மு.கவில் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடாகவே தனதுஆதரவாளர்களுடன் செந்தில் பாலாஜி கடந்த சில நாட்களாக ஆலோசித்து வருகிறார். இந்த நிலையில் தினகரனின் இடதுகரமாக செயல்பட்டு வந்த பழனியப்பனும் கட்சி மாறும் முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

   கிருஷ்ணகரி, தருமபுரி மாவட்டங்களில் தி.மு.கவிற்கு வலுவான தலைவர்கள் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தி.மு.கவிற்கு சென்றுவிட்டால் வட சென்னை சேகர்பாபு போல ஆகிவிடலாம் என்று பழனியப்பன் கணக்கு போடுகிறார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பழனியப்பனை தி.மு.கவில் சேர்த்துக் கொள்ள ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. செந்தில் பாலாஜியும், பழனியப்பனும் ஒரே நாளில் ஸ்டாலினை சந்தித்து தி.மு.கவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.   இந்த தகவல்களை மறுத்து பழனியப்பன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தினகரனுடன் தொடர்ந்து தான் பணியாற்ற உள்ளதாகவும், தி.மு.கவில் இணையப்போவதில்லை என்றும் பழனியப்பன் கூறுகிறார். ஆனால் இது வெறும் கண்துடைப்பு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். டீலிங் முடியும் வரை தி.மு.கவில் இணையும் தகவல் ரகசியமாக இருக்க பழனியப்பன் விரும்புவதாக கூறப்படுகிறது.

   பழனியப்பன் எதிர்பார்க்கும் மாவட்டச் செயலாளர் பதவியும், தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் உறுதியான பிறகு தி.மு.கவில் அவர் இணைவது உறுதி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.