கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் வேண்டும்… மு.க.ஸ்டாலின் ஆவேச வேண்டுகோள்.

ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படும்” என்று மத்திய பா.ஜ.க. அரசு, “தமிழுக்குத் தனியொரு விதி” உருவாக்கி அறிவித்திருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்


அவ்வாறு விரும்பும் மாணவர்களுக்கு “தமிழ் பயிற்றுவிக்க, தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்”, “வாரத்தில் இரண்டு மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும்”, “ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்திலேயே தமிழ் வகுப்புகளை நிறுத்தி விட வேண்டும்” என்றெல்லாம் கடும் “நிபந்தனைகளை” விதித்து அன்னைத் தமிழின் மீது- அகிலம் போற்றும் செம்மொழி மீது, வெறுப்பைக் காட்டியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. “வெறுப்புணர்வை”க் கக்கும் இந்த நிபந்தனைகள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எக்காரணம் கொண்டும் தமிழுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வளவு கடும் கட்டுப்பாடுகளுடன்- தமிழ் பயிற்றுவிப்பது கூட ஆறாம் வகுப்பிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்று, தாய்மொழியைக் கற்பதற்கு எதிரான ஒரு நிரந்தரத் தடையை விதித்து- தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழக மாணவர்களுக்குப் பயன்பட்டுவிடக் கூடாது என்று மத்திய அரசு நினைப்பது, ஒட்டுமொத்தமாகத் தமிழகத்திற்கும்- தமிழ்மொழிக்கும் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். சமஸ்கிருதத்தை, தமிழகத்தில் முடிந்த இடங்களில் எல்லாம் புகுத்தி விடத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு- தமிழ் மொழியை மட்டும் இவ்வாறு சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆறாம் வகுப்பிலிருந்துதான் தாய்மொழி கற்றுக் கொடுக்கப்படும் என்ற இந்த விதி, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கே விரோதமாக இருக்கிறது.“தாய்மொழி கற்றுக் கொடுக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது”; “ஐந்தாம் வகுப்பு வரை- தேவைப்பட்டால் 8 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும்” (The medium of instruction until at least Grade 5, but preferably till Grade 8 and beyond, will be the home language/mother tongue/local language/regional language.) என்று புதிய கல்விக் கொள்கையில் அறிவித்தது, இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சக எண்ணத்துடன் ஏமாற்றுவதற்கு என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அதனால்தான் புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. இந்தியை- சமஸ்கிருதத்தைத் தமிழ்நாடு உள்ளிட்ட “இந்தி பேசாத மாநிலங்கள் மீது” திணிக்க மேற்கொண்ட பகட்டு அறிவிப்பான பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கையின் பச்சோந்தித்தனம், இப்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பிலிருந்து மட்டுமே தாய்மொழி கற்றுக் கொடுக்கப்படும் என்பதில் உறுதியாகி விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பலவற்றிற்கு, தமிழ்நாடு அரசுதான் நிலம் கொடுத்துள்ளது. அங்குதான் கட்டடங்கள் எழுப்பப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கே இந்தப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுவிக்கப்பட மாட்டாது என்பதிலிருந்து, தமிழ் மீது பாசமாக இருப்பது போல் போட்ட பா.ஜ.க.வின் வேஷம் கலைந்து விட்டதைத் தெரிந்து கொள்ள முடிகிறது என்று கூறியிருக்கிறார் ஸ்டாலின்.