10ம் வகுப்பு தேர்வு..! ரத்து செய்யச் சொல்லும் ஸ்டாலின்! நடத்தச் சொல்லும் உதயநிதி! தந்தை - மகனுக்கு என்ன பிரச்சனை?

10ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தாமல் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி வரும் நிலையில் 10ம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்தால் போதும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து உதயநிதி வலியுறுத்தியுள்ளது திமுகவினருக்கே குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.


இரண்டு நாட்களுக்கு முன்னர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கல்கி” வார இதழில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் தாயான கே.ஏ.பத்மஜா என்பவர், தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் என்று கூறி அதன் சாராம்சத்தை பட்டியலிட்டிருந்தார் ஸ்டாலின். அந்த கடிதத்தின் சாராம்சம் இதோ, 

இப்போது நாடே, உலகமே முடங்கிக் கிடக்கும் இந்த நாட்களில் பத்தாம் வகுப்பு பிள்ளைகள் மட்டும் எப்படிப் படித்துக் கொண்டு இருப்பர்? ஆன்லைன் வகுப்புகள் எல்லாப் பிள்ளைகளுக்கும் கிடைப்பது எப்படி சாத்தியம்?

பத்தாம் வகுப்பு மார்க் ஷீட் அவசியம் என்று மட்டும் பேசுகிறீர்கள்? ஏன், கொள்ளை நோய் காலத்தில் தேர்வின்றிக் கொடுக்கப்பட்ட சான்றிதழ் என்ற ஒன்றை நீங்கள் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடாது? அவசியம் இருக்குமெனில், விரும்பிய பாடம் படிக்க அந்தக் கல்வி மையமே ஒரு நுழைவுத் தேர்வு வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு சலுகை கொடுக்கலாமே?

இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் ஸ்டாலின் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது தெரியவருகிறது. இந்த நிலையில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தார்.

இதன் பிறகு பேசிய உதயநிதி, பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுமாறு நாங்கள் கூறவில்லை. பள்ளிகள் திறந்த பிறகு நடத்துமாறுதான் கூறுகிறோம் என்று பேசியிருந்தார். அதாவது 2 நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யுமாறு கேட்டு ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிடுகிறார், உதயநிதியோ ரத்து செய்ய வேண்டாம் என்று கூறி பேட்டி அளிக்கிறார்.

இப்படி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக எடுத்துள்ள நிலைப்பாடு திமுகவினரையே குழப்பம் அடைய வைத்துள்ளது.