கொரேனா அறிகுறிகளுடன் 167 பேர் தப்பி ஓட்டம்? வாட்ஸ் ஆப்பில் பீதி கிளப்பும் செய்தியின் பரபரப்பு பின்னணி!

சண்டிகார்: லூதியானாவில் கொரோனா பாதித்த யாரும் தப்ப முடியாது என்று பஞ்சாப் மாநில அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்த சிலர் உள்ளதாகவும், அவர்களில் 167 பேரைக் காணவில்லை எனவும் தகவல் வெளியானது. இந்த நபர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்பதால், அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கும் கொரோனா பரவக்கூடும்  என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசின் உதவியுடன் சில புள்ளிவிவரங்களை பஞ்சாப் அரசு சேகரித்தது. ஆனால், அதில் தவறான  தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் அரசு இதுபற்றி விளக்கம் அளித்துள்ளது.  

''லூதியானா பகுதியில் வசிக்கும் சிலரது தொடர்பு முகவரி உள்ளிட்ட விவரங்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. எனினும், முடிந்த வரை  லூதியானா உள்பட பஞ்சாப் முழுக்க உள்ளவர்களில் சமீபத்தில் வெளிநாடு சென்றவர்கள், வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை  சேகரித்து, அவர்களை கண்காணிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அவர்களுக்குத் தேவையான கொரோனா வைரஸ் பரிசோதனையையும் முடுக்கிவிட்டுள்ளோம்.

எனினும்,  இந்த விவகாரத்தில் மத்திய அரசு எங்களுக்கு அளித்த 335 வெளிநாட்டுப் பயணிகளின் தொடர்பு முகவரி தவறானதாக உள்ளது. அவர்களை எங்களால் அடையாளம் காண முடியவில்லை. அடுத்த 14 நாட்களுக்குள்  சந்தேகத்திற்கு இடமான நபர்கள் அனைவரையும் பஞ்சாப் முழுக்க தேடி கண்டுபிடித்து, உரிய பரிசோதனை நடத்துவோம். யாரும் எங்களது கண்காணிப்பில் இருந்து தப்ப முடியாது. மக்கள் அச்சமடைய வேண்டாம்,'' என்று பஞ்சாப் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் குறிப்பிட்டுள்ளார்.