பட்ஜெட் விலையில் சாப்பிட இன்ஸ்டாகிராம் மூலமாக வழி காட்டும் லயோலா மாணவிகள்!

சென்னை: பட்ஜெட் விலையில், சாப்பிட முடியாமல், அவதிப்பட நேரிடுகிறதா, கவலை வேண்டாம். உங்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக, இளம் மாணவிகள் வழிகாட்டுகின்றனர்.


சென்னை போன்ற பெருநகரங்களில், கல்லூரி மாணவ, மாணவியர், வேலைக்குச் செல்வோர் என யாராக இருந்தாலும், குடும்பத்தினருடன் தங்கி இருந்தால், உணவை தேடி அலைய வேண்டியதில்லை. ஆனால், அவர்கள் ஹாஸ்டலில் தங்கியிருக்க நேரிடும்போது, உணவு பிரச்னை பெரும் விசயமாக மாற நேரிடுகிறது. 

உணவு தேடி ஓட்டல்களுக்கு சென்றால், விலை மற்றும் தரம் போன்ற விசயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும். அல்லது நீங்கள் தங்கியிருக்கும் ஹாஸ்டல்களில் உணவு விநியோகிக்கப்பட்டாலும், உப்பு, காரம் இன்றி, வெந்தும், வேகாமலும் அவை இருக்கும். இதனால், நாக்கு செத்து, பல்வேறு உடல் உபாதைகளையும் சந்திக்க நேரிடுகிறது. 

இந்நிலையில், உங்களுக்கு வழிகாட்டும் வகையில், லயோலா கல்லூரி மாணவிகள் 2 பேர், இன்ஸ்டாகிராமில் புது வழிமுறையை பின்பற்றி பதிவிட்டு வருகிறார். லயோலா கல்லூரியின் வர்த்தக மேலாண்மை இன்ஸ்டிடியூட்டில் (LIBA) 2ம் ஆண்டு படித்து வரும் ஆன் பிரின்ஸ் மற்றும் அபிநயா சுந்தர் ஆகிய இருவர்தான் இந்த சேவையை மேற்கொண்டுள்ளனர். 

#TwoBrokeGirls என்ற பெயரில் அவர்கள் 2 பேரும் இன்ஸ்டாகிராமில் தனி பக்கம் தொடங்கி, அதில் அவ்வப்போது #foodporn என்ற ஹேஷ்டேக்கில் ரூ.200க்கும் குறைவாக உள்ள தரமான, சுவையான உணவுகள் மற்றும் அவை கிடைக்கும் இடங்களை பதிவிட்டு வருகின்றனர். இவர்களுக்கு, சென்னைவாசிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இதுபற்றி அவர்கள் பேசும்போது, ‘’எங்களுக்கு ஹாஸ்டல் உணவு சுத்தமாக வெறுத்துவிட்டது. அதனால், வெளியிடங்களில் தரமாக, அதேசமயம் விலை குறைவான உணவுகளை சாப்பிட விரும்பினோம். அப்படி அலைந்து திரிந்து பல புதிய ஓட்டல்களையும் கண்டுபிடித்தோம். எங்களைப் போலவே நல்ல உணவு கிடைக்காமல் அவதிப்படும் மக்களுக்கு உதவும் வகையில், நாங்கள் செல்லும் ஓட்டல்களை பற்றி இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக பதிவிட்டால் என்ன என்று யோசித்தோம். அதன் விளைவாகவே இந்த ஐடியாவை செயல்படுத்த தொடங்கியுள்ளோம்,’’ என்று குறிப்பிடுகின்றனர். 

உதாரணமாக, சென்னை ஃபோரம் மாலில் உணவு விலை அதிகம். ஆனால், அதன் கீழ்த்தளத்தில் உள்ள ஸ்பார் கஃபேவில் விலை குறைவான, தரமான உணவுப்பொருட்கள், பழச்சாறுகள் கிடைக்கின்றன. பலருக்கும் இந்த கடை பற்றி தெரியாது என்பதால், தங்களின் இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக, அதனை பிரபலப்படுத்தியதாக, மாணவிகள் தெரிவித்துள்ளனர். 

இதேபோல, அசைவ பிரியர்களுக்கு, ஸோமேட்டா கோல்ட், சாரா’ஸ் சோல் கிச்சன், கஃபே சென்ட்ரல் மற்றும் சென்னை எலியட்ஸ் பீச்சில் உள்ள அன்னை ஃபிஷ் ஃபிரை உள்ளிட்டவை தரமான, விலை குறைவான அசைவ உணவுகள் கிடைப்பதாக, இந்த மாணவிகள் கூறுகின்றனர். 

சென்னை மட்டுமின்றி, எதிர்காலத்தில் பெங்களூரு மற்றும் புதுச்சேரி போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து, அங்குள்ள தரமான, விலை குறைவான உணவு விடுதிகளை பற்றியும் புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்போவதாக, இந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர். இவர்களின் நல்ல முயற்சியை நாமளும் வாழ்த்துவோம்.