அவள் அழகா இல்லை..! அதான்..! வெளிநாட்டுக்கு தப்பிய காதலன்..! கண்டுபிடித்து போலீசார் செய்த தரமான சம்பவம்!

காதலி அழகாக இல்லை என்று காரணம் கூறி ஏமாற்ற நினைத்த இளைஞனை காவல்துறையினர் மடக்கிப்பிடித்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரான அனகாபுத்தூரில் லேபர் பள்ளி என்ற தெரு அமைந்துள்ளது. இங்கு கவிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொழிச்சலூரிலுள்ள அகத்தீஸ்வரர் நகர் எனும் இடத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு உல்லாசமாக சுற்றித்திரிந்துள்ளனர். 

கடந்த சில மாதங்களாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் இருவரும் பிரிய வேண்டும் என்று வெங்கடேஷ் முடிவெடுத்துள்ளார். ஆனால் மனைவி போல் தன்னுடன் வாழ்ந்துவிட்டு, தற்போது வெங்கடேஷ் பிரிந்து செல்வதை கவிதாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை‌. 3 முறை தற்கொலைக்கு முடிவெடுத்த பின்னர், வெங்கடேஷ் சமரசம் பேசவே, அதனை கைவிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வெங்கடேஷ் கவிதாவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார். உடனடியாக காவல்துறையினர் வெங்கடேஷை கண்டு பிடித்து விசாரணை மேற்கொள்ள முயற்சி செய்தனர். 

அப்போது அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயல்வதை உணர்ந்த காவல்துறையினர், உடனடியாக அவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, "நான் கவிதாவை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். ஆனால் அவர் அழகாக இல்லை என்பதால், அவரை விட்டு விலக முடிவெடுத்தேன்" என்று கூறியுள்ளார்.

உடனடியாக காவல்துறையினர் இருவீட்டு பெரியவர்களையும் அழைத்து பேசினர். காவல்நிலையத்திலேயே இருவருக்கும் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். இந்த சம்பவமானது அனகாபுத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.