திருமண வயதைத் தாண்டியும் நல்ல செய்தி கிடைக்கவில்லையா? இந்தக் கோயிலுக்குச் செல்லுங்கள், உடனே திருமணம் நடக்கும்!

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உரிய வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா?


கவலையை விடுங்கள். உங்களைப் போன்றவர்களின் கவலையை போக்குவதற்காகவே வராஹபுரி எனப்படும் பண்ருட்டியில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் தன் பரிவாரங்களோடு கோயில் கொண்டுள்ளார்.

திருக்கோவிலூர் திருவஹீந்திரபுரம் திவ்ய தேசங்களுக்கு நடுவில் இத்தலம் அமைந்திருப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. இங்கு ஆலயம் அமைந்ததின் பின்னணியில் ஒரு சம்பவம் உள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன் பண்ருட்டியில் தீவிர பெருமாள் பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். பரம்பரை பரம்பரையாக இவரது குடும்பத்தார் திருவதிகை ரங்கநாத பெருமாள் கோயிலில் ஆனி மாத பவுர்ணமி அன்று திருக்கல்யாண உற்சவத்தை விமர்சையாக நடத்தி வந்தார்கள்.

ஒரு ஆனி பவுர்ணமி அன்று மாட்டு வண்டியில் சாமான்களை ஏற்றிக்கொண்டு கோயிலை அடைந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவருக்கு பதிலாக வேறு ஒரு உபயதாரர் திருமண உற்சவம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது பற்றிக் கேட்க அவருக்கு தக்க பதில் கிடைக்கவில்லை. எனவே கனத்த மனதுடன் வீடு திரும்பினார்.

அன்றிரவு அவரது கனவில் பெருமாள் தோன்றி கவலைப்படாதே! இதுவும் என் திருவிளையாடல் தான். வயதான காலத்தில் உனக்கு எதற்கு சிரமம். உன் ஊரிலேயே எனக்கு கோயில் கட்டு, உற்சவங்களை நடத்து, அனைவருக்கும் அருள் செய்ய காத்திருக்கிறேன், என்று கூறி ஒரு இடத்தையும் சுட்டிக்காட்டினார்.

பெருமாளுக்கு கோயில் கட்டும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த அவர் அந்த இடத்தில் அதற்கான பணியைத் துவக்கினார். அதே காலகட்டத்தில் அவரது உறவினர் ஒருவர் ஏனாதிமங்கலம் என்னும் கிராமத்தில் விவசாய நிலத்தை தோண்டிய போது பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி ஆகியோரின் கற்சிலைகளை கண்டெடுத்தார்.

பண்ருட்டியில் பெருமாள் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருவதை அறிந்த அவர் உடனே அந்த சிலைகளை அங்கு அனுப்பி வைத்தார். இதுவும் பெருமாளின் விருப்பம் என உணர்ந்த பக்தர் கோயில் கட்டி முடித்ததும் அந்த மூன்று சிலைகளை முறைப்படி பிரதிஷ்டை செய்தார். இதுவே இன்று பண்ருட்டி காந்தி ரோட்டில் அமைந்துள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோயிலாகும்.

மூலவருக்கு எதிரில் தனி சன்னதியில் கருடன் தரிசனம் தர கருவறையில் கிழக்கு நோக்கி கம்பீரமான தோற்றத்தோடு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளி உள்ளார் வரதராஜ பெருமாள். சந்நிதிக்கு வலதுபுறம் பெருந்தேவி தாயாரும் இடதுபக்கம் ஆண்டாளும் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட திருமண தடையும் இவர்களை வழிபட்டால் நீக்கி விடுகிறதாம்.

அஸ்த நட்சத்திரத்தன்று இங்கு நடைபெறும் திருமஞ்சனத்திலும், திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும் கல்யாண உற்சவத்திலும் கலந்து கொண்டு வரதராஜப் பெருமாளையும் பெருந்தேவி தாயாரையும் செவித்தால் சர்வ தோஷமும் நீங்கி திருமணம் உள்பட சகல சுப காரியங்களும் நடைபெறுகிறதாம். திருமண உற்சவத்தின்போது சகஸ்ரநாமம் சொல்லப்பட்டு பெருந்தேவி தாயார் ஆயிரத்தெட்டு தாமரை மலர்களால் அர்ச்சிக்க படுவதோடு வெள்ளிப் பல்லக்கிலும் எழுந்தருள்வார்.

ஆலயத்தில் ஆஞ்சநேயர், யோக நரசிம்மர், சுதர்சனர், அனந்தாழ்வார், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனியும் தரிசனம் தருகிறார்கள். விநாயகப்பெருமான் தும்பிக்கை ஆழ்வார் என்ற பெயரில் சந்நிதி கொண்டுள்ளார். கோயில் குளத்தில் நடுவில் காளிங்கன் என்ற விஷப் பாம்பை கையில் பிடித்தவாறு கிருஷ்ணர் காட்சியளிக்கிறார்.

வைகுண்ட ஏகாதேசி சமயம் பகல் பத்து ராப்பத்து உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். அப்பொழுது பெருமாள் திருவடியில் நம்மாழ்வார் சேருதல் நிகழ்வு நடைபெறும். மாசி மகத்தன்று தேவனாம்பட்டினம் கடற்கரையில் இத்தல பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பார். கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்திற்கு தனிச் சிறப்பு உண்டாம். இத்தல பெருமாளையும் தாயாரையும் வேண்டிக்கொண்டு தீர்த்தத்தை சிறிது அருந்த தீவினைகள் நீங்கி, உடல் பிணிகள் தணிந்து உடல் நலம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

இத்தலத்திற்கு வந்து எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்தால் சகல காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.