பக்தனைத் தேடி வந்த கங்கா தேவி! வீட்டுக் கிணற்றில் பொங்கிய வெள்ளம்!

ஸ்ரீதர அய்யாவாள், திருவிடைமருதூர், ஸ்ரீமகாலிங்க சுவாமியின் மீது அலாதிப் பற்று கொண்டவர்.


ஆந்திர தேசத்தில் ராஜமகேந்திரம் என்கிற நகரத்தில் பிரம்மராயர்கள் என்றும் அமாத்ய குலத்தவர் என்றும் புகழ்பெற்ற பிராமணர்கள் இருந்தனர். இவர்கள் வேத வேதாந்தங்கள் மட்டுமல்லாது ராஜநீதி, தனுர் வேதம், சேனா சதுரங்கம், சிற்ப சாஸ்திரம் முதலியவற்றை படித்தும், போதித்தும் வந்தனர். அத்தகைய அமாத்ய குலத்தில் பிறந்து மைசூர் ராஜ்யத்தில் மந்திரி பதவி வகித்தவர் லிங்கார்யர்.

இவருடைய திருப்புதல்வரே ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள். தந்தையைப் போலவே அதிமேதாவியாகவும் அதேசமயம் விநயத்துடனும், சதா நேரமும் சிவனை உள்ளத்தில் இருத்தியும் வாழ்ந்தவர். தந்தையார் காலமானவுடன் அரசாங்கப் பதவியை ஏற்றுக் கொண்டு சிறிது காலத்துக்குப் பிறகு அதை உதறினார். ஸ்ரீபோதேந்திர சுவாமிகளையும், சதாசிவ பிரம்மேந்திரரையும் தரிசிக்க வேண்டுமென்கிற பேரவா அவர் உள்ளத்தில் எப்போதும் ஏக்கமாகத் தேங்கியிருந்ததுதான் காரணம்.

அது அவரை தமிழகம் நோக்கி உந்தியது. அரச போகங்களை துச்சமென விடுத்து உஞ்சவிருத்தி தர்மத்திலுள்ள நம்பிக்கையில் திருச்சிராப்பள்ளிக்கு வந்து சேர்ந்தார். ஐயாவாள் பரம சிவபக்தர். உள்ளுக்குள் சிவநாமம் சொல்லிச் சொல்லி நாமச் சாரலில் இடையறாது நனைவார். அவரைக் கடந்து செல்வோர்கூட காலத்தில் சிவநாமத்தை சொல்லத் தொடங்கி விடுவர்!

அனுதினமும் அர்த்தஜாம பூஜை பார்க்க வந்து விடுவார். ஒரு நாள் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மகாலிங்கப் பெருமாளை மனமுருகி வேண்டியதும் ஆற்றின் இடையே அவர்வர நதியே வழிவகுத்துக் கொடுத்ததாம்

அது கார்த்திகை மாதம். அமாவாசை தினம். அவர் வழக்கம்போல சிராத்தம் செய்யும் ஏற்பாடுகளை மேற்கொண்டார். வைதீக சம்பிரதாயங்களை நிறைவேற்ற பிராமணர்களை அழைத்தார். காவிரியில் ஸ்நானம் செய்து விட்டு வந்தார்.

அவர் உள்ளே நுழையும்போதே, ‘‘ஐயா, பசிக்குதுங்கய்யா. சோறு போடுங்கய்யா’’ என்று வாசலில் சாம்பன் என்பவனின் குரல் கேட்டது. பல நேரங்களில் இரவில் ஐயாவாள் காவிரியை கடக்கும்போது வெளிச்சத்துக்காக தீவட்டி பிடிப்பவன் அவன். இன்றோ சிராத்த தினம். பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்து விட்டு பிறகுதான் தானே சாப்பிட வேண்டும். ஆனால், இந்த சாம்பன் தனக்குப் பசிப்பதாக வேதனைக் குரல் கொடுக்கிறானே!

‘‘ஐயா, சாம்பன் வந்திருக்கேங்க’’ என்று மீண்டும் குரல் கேட்டது. ஐயாவாளுக்கோ சாட்சாத் அந்த பரமசிவனே வந்து கேட்பதுபோல் இருந்தது. சிவநாமத்தை சொல்லிச் சொல்லி சிவ மயமாகவே நிற்பவராயிற்றே! தான் காணுமிடமெல்லாம் சிவமயமாக உணருபவராயிற்றே! ஒரு தீர்மானத்துடன் ஐயாவாள் சாம்பனை நோக்கி நடந்தார்.

தோட்டத்திற்கு வரச் சொன்னார். அங்கிருந்த சாப்பாட்டை எடுத்து பரிமாறச் செய்தார். அவனும் உணவை உண்டு விட்டு மீதியைத் துண்டில் கட்டிக் கொண்டு புறப்பட்டான். ஐயாவாள் வீட்டை மீண்டும் சாணியால் மெழுகினார். ‘புதிதாக சமையல் செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டார். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பிராமணர்கள் முகம் சுளித்தார்கள்.

‘இவர்கள் அனைவருமே வேதத்தின் கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட விதிகளை அனுஷ்டிக்கிறவர்கள். ஜீவன் செய்ய வேண்டிய சகல கர்மங்களையும் வரி பிசகாது கடைபிடிப்பவர்கள். எனவே, இவர்கள் யோசிப்பதிலும் தவறில்லை. அதேசமயம் வந்திருந்த பிராமணர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய விரும்பினார். ‘‘இதற்கு பரிகாரம் என்ன’’ என்று அவர்களிடம் நேரடியாகக் கேட்டார்.

”கங்கையில் மூழ்கி ஸ்நானம் செய்வதுதான்,’’ அந்தணர்கள் மூவரும் தீர்க்கமாக ஒரே குரலில் சொன்னார்கள். ஐயாவாள் மெல்லக் கண்களை மூடினார். சட்டென்று ஐயாவாள் அதிசூட்சுமமாக தன் பார்வையை உள்ளுக்குள் திருப்பி பரமேஸ்வரனிடம் பேசத் தொடங்கினார்.‘எங்கு பார்த்தாலும் உங்களையே நான் காண்கிறேன். அதேபோல வந்தவனுக்குள்ளும் உங்களையேதான் கண்டேன்’’ என்றார்.

அப்படியெனில் வந்த நம் சாம்பனும், ஈஸ்வரனும் ஒன்று என்று அந்த அந்தணர்களிடம் சொல்லி விட்டுப் போய்விடுங்கள். என் விஷயத்தில் இதிலொன்றும் தவறில்லை என்று சொல்லிவிட்டு சாப்பிடச் சொல்லுங்கள்’’ பரமேஸ்வரன் சிரித்தபடி சொன்னார். அப்படியெனில் அவர்கள் சொன்னபடி கங்கைக்கு சென்று நீராடிவிட்டு வாருங்கள்’

இங்கிருந்து கொண்டே கங்கே... கங்கே... என்று சொன்னால் கூட போதுமல்லவா? சாஸ்திரமும் இதை அங்கீகரிக்கிறது அல்லவா’என்றார் ஐயாவாள். கவலைப்படாதே. நீ சொல்லும் நாமமே உன்னை காப்பாற்றும்’’ ‘பகவானே, இப்போது தினமுமே உங்களின் நாம ஜபம் விடக் கூடாது என்பதற்காகவே இங்கிருக்கும் கிணற்றில் குளித்து விடுவேன்; காவிரிக்கு போவதில்லை. எனக்கு உங்களின் திருநாமத் தீர்த்தம் தவிர வேறு தீர்த்தங்கள் தெரியாது. நான் எப்போது கங்கைக்குப் போய், திரும்பி வந்து.... பகவானே முடிகிற காரியமா இது?’’

‘‘சரி, இப்போது என்னதான் செய்யப் போகிறாய்?’’ சிவனார் இறுதியாக அவரின் நாம உறுதியை சோதித்தார். ‘‘சுவாமி நான் ஒன்றும் செய்யப் போவதில்லை. உங்களின் திருநாமமே எனக்குக் கதி. கங்காதர... கங்காதர... கங்காதர.... என்று மட்டுமே சொல்வேன். வேறொன்றும் சொல்லத் தெரியாது’’ என்று கங்காஷ்டத்தை தன்னையும் மீறி பாடத் தொடங்கினார். அருகேயிருந்த பிராமணர்கள் அவரையே வியப்போடு பார்த்தார்கள்.

கங்கையை தலையில் சூடியவன் அன்றைய நாள் ஐயாவாளின் வீட்டிற்குள் உள்ள சிறு கிணற்றுக்குள்ளிருந்து கங்கையை பொங்க வைத்தான். அந்த கங்கை ஐயாவாளின் சிவ பக்தியால் பெருகிய ஆத்ம கங்கை! பக்தனின் துயர் துடைக்க ஈசனே முறையையும் பாதைகளையும் மாற்றுகிறான். அப்படியே எங்கோ வடநாட்டில் பாய்ந்து கொண்டிருந்த கங்கை, இந்த சிறு கிராமத்தை கண நேரத்தை அடைந்து கிணற்றிலிருந்து ஊற்றாக உயர்ந்தாள்.

கிணற்றுப் பக்கம் ஏதோ பேரருவியின் சத்தம் கேட்பது போல இருந்தது. பிராமணர்கள் ஓடிச் சென்று பார்த்து திகைத்து ஆனந்தப்பட்டனர். கிணற்றிலிருந்து பொங்கிய கங்கை கூடம், தாழ்வாரம், திண்ணை, தெரு என்று பாய்ந்தோடியது. ஆதியில், ஈசனுக்கு கட்டுப்பட்டவள் இப்போது பக்தனுக்காக ஆனந்தமாக அந்த கிராமத்தை மூழ்கடிக்கத் துடித்தாள். சிலருக்கு ஏதோ ஊற்று போல இருந்தது. கங்கையிலுள்ள முதலைகளும், ஆமைகளும் இந்த கிணற்றாற்றில் நெளிந்தன!

இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிசநல்லூர் ஐயாவாள் மடத்தில் நிகழ்கிறது, முன்னூறு ஆண்டுகளாக இந்தக் கிணற்றுக்குத் புனித கங்கை நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீதர அய்யாவாள் கங்கையை வரவழைத்த கிணற்றுக்குப் பூஜை ஆராதனைகள் செய்ததும் அவரைத் தியானித்து கங்காஷ்டகம் ஜபித்து கற்பூர ஆரத்தி செய்வார்கள்.

அதன் பிறகு கங்கை தீர்த்தத்தை எடுத்து முதலில் பாகவதர்களும் வேதவிற்பன்னர்களும் ஸ்நானம் செய்வார்கள். பிறகு கூட்டமாக வந்திருக்கும் பக்த ஜனங்கள் எல்லோரும் நீராடுவார்கள். இந்த உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். உற்சவத்தின் கடைசி நாளாகிய அமாவாசை தினத்தில்தான் காசியிலிருந்து ஸ்ரீகங்கா தேவி இங்கு வருகிறாள் என்று ஐதீகம்.