முருகப்பெருமான் என்றாலே வேலும், மயிலும் வைத்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், குறிப்பிட்ட சில தலங்களில் வித்தியாசமான கோலங்களில் காட்சி தருகிறார்.
கிளி ஏந்திய முருகன் கோயில் தமிழகத்தில் எங்கே இருக்கிறது தெரியுமா? சங்கு சக்கரத்துடனும் காட்சி தரும் அதிசய முருகன்
அந்த வகையில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் தலங்களில் என்னென்ன வடிவில் காட்சி தருகிறார் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்....!
கும்பகோணம் அருகில் 'அழகாபுத்தூர்" என்ற இடத்தில் உள்ள கோவிலில் முருகப்பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.
திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாக காட்சி தரும் முருகப்பெருமானின் மூல விக்ரகம் இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்து, இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி தருகிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடன் வடிவ முருகன் சிலையில் இருந்து வியர்வை வருவது வியப்பான ஒன்றாகும்.
ஏலகிரி மலைக்கு அருகில் ஜலகாம்பாறை என்ற இடத்தில் உள்ள முருகன் கோவிலில் ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. முருகன் விக்ரகம் இல்லை. இக்கோவில் வேல் வடிவில் முருகன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயமாகும்.
சென்னிமலை முருகன் கோவிலில் உள்ள முருகன், இரண்டு முகங்களும் எட்டு கரங்களும் கொண்டு காட்சி தருகிறார். சென்னிமலை முருகன் கோவில் சந்நிதிக்கு எதிரில் காகங்கள் பறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கடையூர் அருகில் உள்ள திருவிடைக்கழி முருகன் கோவில் சிவாலய வடிவில் அமைந்துள்ளது. இங்கு முருகன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோவிலில் முருகன் சிலைக்கு முன்பு ஸ்படிக லிங்க வடிவில் சிவபெருமான் காட்சி தருகிறார்.
மயிலாடுதுறைக்கு அருகில் திருவிடைக்கழி என்ற ஊரில் உள்ள முருகன் கோவிலில் இருக்கும் குமரன் ஒரு கையில் வில்லுடனும், மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.
திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப்பெருமான் மூன்று கண்கள் மற்றும் எட்டு கரங்களுடன் காட்சி தருகிறார்.
கனககிரி என்ற இடத்தில் உள்ள கோவிலில் முருகன் கைகளில் கிளியை ஏந்தியபடி காட்சி தருகிறார்.
மயிலாடுதுறைக்கு அருகில் நெய்குப்பை என்ற ஊரில் பாலமுருகன், அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார்.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணனூர் என்ற ஊரில் மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. அக்கோவிலில் முருகன் ஒரு கரத்தில் ஜெப மாலையுடனும், மறு கரத்தில் 'சின்" முத்திரையுடனும் காட்சி தருகிறார்.