மோடியின் ஊரடங்கு 3.0..! எதற்கெல்லாம் அனுமதி? எதற்கெல்லாம் தடை?

நாடு முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு லாக் டவுனை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது நாளுக்கு நாள் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மத்திய அரசு தற்போது நிலவிவரும் லாக் டவுனை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய நாட்டில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமுள்ள மாவட்டங்கள் சிகப்பு மண்டலங்களாகவும், கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், கடந்த 21 நாட்களாக கொரோனா வைரஸால் எந்த ஒரு பாதிப்புக்கும் உள்ளாகாத பகுதிகள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

எனினும் விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து போன்றவை முற்றிலுமாக இயங்காது எனவும் பள்ளி , கல்லூரிகள் இயங்காது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல ஷாப்பிங் மால்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது எனவும் தங்கும் ஹோட்டல்கள் இயங்காது எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் எந்தப் பாகுபாடுமின்றி அனைத்து மண்டலங்களுக்கும் பொருந்தும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கும் இடங்களில்கூட மாலை 7 மணிக்கு மேல் காலையில் 7 மணிக்குள்ளாக யாரும் வெளியே செல்ல அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிவப்பு மண்டலங்களில் கண்டைன்மெண்ட் ஜோன் இல்லாத பிற பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 33 சதவீத ஊழியர்களுடன் ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிகப்பு மண்டலங்களில் கூடுதலாக சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. சிகப்பு மண்டலத்தில் ஆட்டோ, ரிக்க்ஷா, கேப் போன்றவை இயங்காது எனவும் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிகப்பு மண்டலங்களில் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலமாக அத்தியாவசிய பொருட்களை மட்டும் டெலிவரி செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலைகள் இயங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிகப்பு மண்டலத்தில் அனுமதிக்கப்பட்ட விஷயங்களுக்காக கார்களில் அதிக பட்சமாக 2 பேர் பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் மதுபானக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனாலும் மாநில அரசுகள் வேண்டுமென்றால் மதுபான கடைகளை மூட உத்தரவிடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு மண்டலத்தில் டாக்ஸி ,கேப் போன்றவைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது. வாடகை கார்களில் டிரைவருடன் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநரை தவிர இரண்டு பேர் பயணம் செய்யலாம் எனவும் இரண்டு சக்கர வாகனங்களில் இரண்டு பேர் பயணிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலும் பச்சை மண்டலங்களில் பொது போக்குவரத்திற்காக பேருந்துகள் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.