உள்ளாட்சித் தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும்! கம்யூனிஸ்ட் போர்க்கொடி!

உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அதனை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், விரைந்து நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.


அந்தக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை இது. கடந்த 2016 அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தலை அ.இ.அ.தி.மு.க. அரசு மூன்றாண்டுகளாக நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது.

இது அரசியலமைப்பு சட்ட அத்துமீறலாகும். இது தொடர்பான முறையீடுகளை விசாரித்த உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தவிட்டுள்ளன. இவைகளும் மதிக்கப்படவில்லை.

இவைகள் அனைத்தும் சட்ட நெருக்கடியாக முற்றியுள்ள சூழலில், தமிழ்நாடு அரசு அரைகுறை மனதுடன் உள்ளாட்சி தேர்தல் தயாரிப்புகளை தொடங்கியுள்ளது. அரசின் அணுகுமுறை வெளிப்படையற்ற, மர்மங்கள் உள்ளடங்கிய முறையில் அமைந்திருக்கிறது. இதனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா என்ற வினா தொடர்கிறது.

திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் தற்போது 9 மாவட்டங்களாக பிரித்தமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவைகளுக்கான மாவட்ட ஊராட்சி, ஒன்றிய ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் எல்லைகள் வரையறுப்பு செய்யப்படவில்லை. பழைய நிலையில் தேர்தல் நடந்தால், புதிய மாவட்ட அமைப்புகளில் உள்ள வார்டுகள் மற்றும் தலைவர்கள் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீடு விதிமுறைகள் எப்படி அமையும் என்பதில் முரண்பாடான தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில் ‘அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிந்த பிறகு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவற்கான அறிவிக்கை டிசம்பர் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்’ என உச்சநீதிமன்றம் நவம்பர் 18.ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு புதிய மாவடங்களுக்கான உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளை வரையறுத்து, தேர்வு செய்யப்படும் வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள் ஆகிய தொகுதிகளுக்கான இட ஒதுக்கீடு செய்து, அனைத்து சட்ட நடைமுறைகளையும் நிறைவு செய்து, உள்ளாட்சி தேர்தலை ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.