ரஜினி வருகைக்கு இப்படி ஒரு பார்வையா… பேராசிரியர் சொல்வதைக் கேளுங்க.

ரஜினிகாந்த் அரசியல் வருகை உறுதியானதில் இருந்து ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. அவற்றில் பேராசிரியர் டி.தருமராஜின் பதிவு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதோ, அந்த பதிவு.


ரஜினிகாந்த் நமது தமிழக ஜனநாயகத் தேர்தல் அரசியலில் ஆபத்தானவர். கமலஹாசனைப் போல் இல்லாமல் ரஜினிகாந்தால் தனது சுயத்தை மறைத்துக் கொள்ள முடிகிறது. அல்லது, தனக்கு சுயம் என்று எதுவுமில்லை என்று சொல்ல முடிகிறது. கமலஹாசனால் இது என்றென்றைக்கும் முடியாத காரியம். அதனாலேயே, கமலஹாசன் தன்னால் தோற்பார், ரஜினிகாந்த் வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளன.

ரஜினிகாந்தின் அரசியல் சூத்திரம் மிக எளிமையானது. எனக்கென்று எதுவுமில்லை என்று அவர் தொடர்ந்து நிரூபிக்க விரும்புகிறார். தனக்கு சொந்தமாய் எந்தக் கருத்தும் இல்லை என்பதே அவரது அரசியல். தான் ஒரு வெற்றிடம் (சூனியம், என்று வாசிக்கவும்) என்பதை அவர் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

சினிமாவிலும் கூட கமலஹாசன் புத்திசாலி நடிகர்; ரஜினிகாந்த், இயக்குநரின் நடிகர் என்பதைக் கவனியுங்கள். இந்த முட்டாள்தனம் / சூனியம் ஆபத்தானது. வெகுஜனத்தை தன்னை நோக்கி ஆக்ரோஷமாய் இழுக்கக்கூடியது. காமராசருக்கும் எம்ஜியாருக்கும் இப்படியே நடந்தது. பா. ரஞ்சித் ரஜினிகாந்தின் மூலமாக தலித் அரசியலை பேச முற்பட்ட பொழுதெல்லாம் நான் பதறியதன் காரணமும் அது தான். அது, எம்ஜியார் நரிக்குறவர் வேடம் போட்ட மாதிரி.

ரஜினிகாந்தி (தட்டச்சு செய்த போது நிகழ்ந்த தவறு, ரஜினிகாந்தி! அதைச் சரி செய்வதற்காக வந்தவன் 'அட, இது இன்னும் பொருத்தமாக இருக்கிறதே' என்று அப்படியே விட்டுவிட்டேன்!) ஒரு சூனியம். அதில் கபாலி, காலா என்று தலித் அரசியலையும் போடலாம்; துக்ளக் பத்திரிகை விழா போல பிராமண அரசியலையும் போடலாம். எல்லாவற்றையும் பிரதிபலிக்கும்.

ரஜினிகாந்தை வெற்றி கொள்வதற்கு ஒரேயொரு காரியத்தை தான் செய்ய வேண்டும். அவர் தன்னை சூனியம், முட்டாள் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதை உடைப்பதற்கு அவர் எவ்வளவு புத்திசாலி, காரியக்காரர், தந்திரங்களை உடையவர், வியாபார நுணுக்கங்கள் உடையவர் என்பதை ஆதாரபூர்வமாக திரும்பத் திரும்ப பொதுவெளியில் நிரூபிக்க வேண்டும்.

ரஜினிகாந்த் வலிந்து உருவாக்கும் சூனியத்தை அழிப்பது தான் மிகச் சரியான அரசியலாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.