பட்டம் பயின்ற முதல் பெண் வழக்கறிஞர் லில்லி தாமஸ் மரணம்! அவரை மறக்க முடியுமா?

வழக்கறிஞர் லில்லி தாமஸ் இயற்கை எய்தியுள்ளார். அவரை பற்றி சரவணன் எழுதியிருக்கும் உருக்கமான பதிவு இது.


கோட்டயத்தில் பிறந்த லில்லி தாமஸ் சென்னைப் பல்கலையில் சட்டம் பயின்றார். இவ்வரியை எளிமையாக எழுதினாலும் விடுதலை இந்தியாவில் லிலிவி பட்டம் பெற்ற முதல் பெண் எனும் பெருமை அவருக்கு 1954ல் கிட்டியது. சட்ட மேற்படிப்பை முடித்த அவர் 1959 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடினார்.

முனைவர் பட்ட ஆய்விற்கு டெல்லி சென்றார். தனக்கு அது ஒத்துவராது எனத்தெரிந்ததும் உச்சநீதிமன்றத்தில் வழக்காட முடிவு செய்தார். அப்பாவிடம் என்ன செய்யப்போகிறோமா என அஞ்சி நின்ற போது, 'ஒரு போலீஸ்காரரை வண்டி பிடிச்சுத் தரச்சொல்லு. சுப்ரீம் கோர்ட்ல போய் இறங்கு. அதுக்கப்புறம் உன் ஆட்டம் தான்.' என ஊக்கப்படுத்தினார். 1960ல் உச்சநீதிமன்றத்தில் வழக்காடத் துவங்கினார்.

அவரைப்போல நான்கு பெண்மணிகள் மட்டுமே அங்கே வழக்கறிஞராக இருந்த காலம். லில்லி தாமஸ் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதற்கு என்று தனியாகத் தேர்வெழுத வேண்டும் என்பதை எதிர்த்து வாதிட்டார். இந்தியா முழுக்கத் தங்குதடையின்றி வழக்கறிஞர்கள் வாதாட இயலும் எனத்தரப்பட்ட சட்டவுரிமையை அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 145 ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் தடுப்பதாக அவர் கருதினார்.

எழுத்தாளர் அருந்ததி ராயின் தாய் மேரி ராய் சிரியன் கிறிஸ்தவர். திருவிதாங்கூர் பரம்பரை சொத்துரிமை சட்டம், கொச்சின் பரம்பரை சொத்துரிமை சட்டம் ஆகியவை சிரியன் கிறித்தவப் பெண்களுக்குப் பரம்பரைச் சொத்தில் மிகச்சொற்ப அளவையே தந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மேரி தந்தையின் இறப்பின் போது இரண்டு குழந்தைகளோடு வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார். அவருக்காக லில்லி தாமஸ் வாதாடி பரம்பரைச் சொத்தில் உரிமை பெற்றுத் தந்தார்.

இந்து மதத்தில் இருந்து இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஒரு ஆண் இஸ்லாமிற்கு மதம் மாறுவது சார்ந்தும் வழக்கு தொடுத்தார். முதல் திருமணம் இந்து திருமணச்சட்டப்படி நடப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் பலதாரத் திருமணம் புரிய இஸ்லாமிய சிவில் சட்டம் இடம் தந்தாலும் இதில் இந்து திருமணம் அடங்காது என வாதிட்டார். இதனையடுத்து முதல் இந்து முறைப்படி நிகழும் திருமணத்தில் இருந்து மணவிலக்குப் பெறாமல் மதம் மாறிச் செய்யப்படும் திருமணம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பெழுதியது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்ற வழக்கில் இரண்டாண்டு அல்லது அதற்குக் கூடுதலாகச் சிறைத் தண்டனை பெற்ற பின்னரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று மாதம் பதவியில் தொடரலாம். மேல்முறையீடு நிகழ்ந்தால் அவ்வழக்கில் தீர்ப்பு வரும் வரை பதவியில் தொடரலாம் எனும் சட்டப்பிரிவிற்கு எதிராக நீதிமன்ற படியேறினார்.

இருமுறை குப்பைக்கூடைக்குப் போன மனு மூன்றாவது முறை சிறைத்தண்டனை பெற்றதும் பதவியிழப்பு எனத் தீர்ப்பெழுத வைத்தது. குற்றவாளிகள் அற்ற அரசியலே தன் கனவு என லில்லி தாமஸ் சூளுரைத்தார். அதிகார பீடங்களுக்கு எதிராக அயராமல் சட்டப்போர் தொடுத்த அவரை 'லில்லி தாமஸ் ஸ்s இந்திய ஒன்றியம்' என்றே செல்லப்பெயரிட்டு அழைத்தார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜீ ஒருமுறை 'சட்டப்புத்தகத்தில் லில்லி தாமஸ் எதிர் இந்திய ஒன்றியம் என நாங்கள் பாடம் படிக்கும் அதே ஆளுமை நீங்கள்தானா' என நெகிழ்வோடு கேட்டார். இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் சட்டப்பயணத்தில் தன்னை நிறைத்துக் கொண்டார். 'ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?' எனக்கேட்டதற்கு,

'நான் விரும்பிய ஆண்கள் சாமியாராகவோ, நீதிபதியாகவோ மாறிவிட்டார்கள்.' என்றுவிட்டு, 'என் கனவுநாயகன் ஜேம்ஸ் பாண்ட், லிங்கன், சர்ச்சில் ஆகியோரின் கலவையாக இருந்தால் பார்க்கலாம் என்றிருந்தேன்' எனக் கண்ணடித்தார். 90 வயதிலும் 8 மணிநேரம் வரை சட்டப்பணிகளில் ஈடுபட்ட சளைக்காத சட்ட அறிஞரான லில்லி தாமஸை நினைவுகூர்வோம்.