எய்ட்ஸ் இல்லாத உலகம் படைப்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை

மக்களிடையே எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து “உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்”ஆகும்.


எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசால் தனிக் கவனம் செலுத்தப்பட்டதன் காரணமாக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் சதவிகிதம் 2010-11ஆம் ஆண்டு 0.38 சதவிகிதத்திலிருந்து 2019ஆம் ஆண்டு 0.18 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும், புதிய எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய 3161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நடமாடும் நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் 216 பால்வினை நோய் தொற்று சிகிச்சை மையங்களின் மூலமாக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும், 174 இணை கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி தொற்றுள்ள பெற்றோரிடம் இருந்து கருவிலுள்ள குழந்தைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் சிறப்பு மருத்துவ சிகிச்சை மாவட்டந்தோறும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்படும் நம்பிக்கை மையம் மற்றும் கூட்டு மருந்து சிகிச்சை மையங்களில் அளிக்கப்படுகிறது.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் உயரிய நோக்கில், மாண்புமிகு அம்மாவின் அரசு அவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- ஓய்வூதியம் வழங்குதல், எச்.ஐ.வி தொற்று பாதிக்கப்பட்ட இளம் விதவைகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாத ஓய்வூதியம் வழங்குதல், எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுள்ளோர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுவர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு, சிகிச்சை, பராமரிப்பு மற்றும் தொடர் சேவைகள் கிடைக்கப் பெற இளைப்பாருதல் மையம் (Drop in Centre) என்னும் திட்டத்திற்காக 2.41 கோடி ரூபாய் நிதியுதவியுடன் மாநிலம் முழுவதும் சுமார் 34 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்த நிதியாண்டு முதல் (2020-2021) செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்று, எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் என்பதை மனதில் கொண்டு, அவர்களையும் மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு முதல்வர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.