திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை! திருவாரூரில் மூட்டையுடன் சிக்கிய கொள்ளையன்! 36 மணி நேரத்தில் கெத்து காட்டிய தமிழ்நாடு போலீஸ்!

லலிதா ஜூவல்லரி கொள்ளையர்களை 36 மணி நேரத்திற்குள் கைது செய்து தமிழக போலீசார் கெத்து காட்டியுள்ளனர்.


கடந்த செவ்வாய்கிழமை இரவு திருச்சி லலிதா ஜூவல்லரிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் இருவர் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு முதல் தளத்தில் இருந்த நகைகளை மொத்தமாக அள்ளிச் சென்றனர். அதன் மதிப்பு 13 கோடி ரூபாய் என்று உரிமையாளர் கிரண்குமார் கூறியிருந்தார்.

இதனிடையே கொள்ளையர்கள் முகத்தில் முகமூடி அணிந்திருந்தனர். மேலும் உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் உடைகள் அணிந்திருந்தனர். இதனால் அவர்களை அடையாளம் கண்டு கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்தது. இருந்தாலும் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அதோடு மட்டும் அல்லாமல் இரவு நேரத்தில் கொள்ளையர்கள் வெளியே வர வாய்ப்பு இருப்பதால் தமிழகம் முழுவதும் வாகன சோதனை முடுக்கிவிடப்பட்டது. இந்த நிலையில் திருவாரூரில் வாகன சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகன்ததில் வந்த 2 பேர் தப்ப முயன்றனர்.

அவர்களை போலீசார் விரட்டிச் சென்ற நிலையில் ஒருவன் சிக்கியுள்ளான். மற்றொருவர் தப்பியுள்ளான். சிக்கியவனை சோதனை செய்த போது கையில் சிறிய மூட்டை ஒன்றை வைத்திருந்தான். உள்ளே பார்த்த போது முழுவதும் தங்க நகைகளாக இருந்தன.

இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில் லலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடித்தது தான் தான் என்று அவன் கூறியுள்ளான். இதனை அடுத்து தப்பி ஓடியவனை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை நடைபெற்ற 36 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீசார் பலராலும் பாராட்டப்படுகின்றனர்.